திறன்பேசி தடையால் விளைந்த மாற்றம்: மாணவர்கள் நட்புறவில் நல்ல முன்னேற்றம்

திறன்பேசி தடையால் விளைந்த மாற்றம்: மாணவர்கள் நட்புறவில் நல்ல முன்னேற்றம்

2 mins read
a7e09344-ac8d-47cf-9604-bd4ea4a42620
திறன்பேசி தடைக்குப் பிறகு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முன்பைக் காட்டிலும் அதிகமாக நட்புறவாடுவதாக தெரியவந்துள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

திறன்பேசி தடைக்குப் பிறகு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் முன்பைக் காட்டிலும் அதிகமாக நட்புறவாடுவதாகவும் எனினும் சிலர் விதியை மீறுவதாகவும் தெரியவந்துள்ளது.

உயர்நிலைப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட கைப்பேசிகளுக்கான தடை எவ்வாறு செயலாற்றுகிறது என்று ‘சிஎன்ஏ’ ஊடகம் ஆசிரியர்கள் மாணவர்களிடம் பேசியபோது அதுகுறித்த பல்வேறு கருத்துகள் பெறப்பட்டன.

அதில் பெரும்பாலானோர் அந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருந்ததாகக் கூறியுள்ளனர். நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட பள்ளியின் உயர்நிலை மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவி டியுதி பட் கூறுகையில், “முன்பு, நிறைய பேர் தங்கள் தொலைப்பேசிகளில் வீடியோ கேம் விளையாட்டில் நேரம் செலவழிப்பார்கள்.

‘‘ஒருவருக்கொருவர் பேசுவதில்லை. பள்ளி உணவகத்தில் ஏதாவது ஒரு மூலையில் அமர்ந்து கைப்பேசியைப் பார்த்தவாறு இருப்பார்கள்.

‘‘ஆனால் இப்போது அப்படி இல்லை. நிறைய பேர் ஒருவருடன் ஒருவர் பேசுகிறார்கள். பள்ளியின் சிற்றுண்டி உணவகமும் மிகவும் துடிப்பாக உள்ளது,” என்றார்.

இந்த மாதத்திலிருந்து உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் கைப்பேசியைப் பயன்படுத்துவதற்குக் கடுமையான விதிமுறைகள் நடப்புக்கு வந்துள்ளன.

இதற்கிடையே, சில பள்ளிகள் இந்த மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டு அமல்படுத்தியும் உள்ளது.

அவ்வகையில் இது குறித்து பேசிய உயர்நிலை இரண்டாம் வகுப்பு மாணவர் லுக்காஸ் பிலிப், தற்போது திறன்பேசி அவ்வளவாக நினைவுக்கு வருவதில்லை என்று கூறியிருக்கிறார்.

“பொதுவாக, நான் என் கைப்பேசியைப் பார்த்து, அதில் என்ன வருகிறது, எனக்கு என்ன செய்திகள் உள்ளன என்று யோசிப்பேன்? ஆனால் இப்போது, ​​அது பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்படுவதால், திறன்பேசியைப் பற்றி உண்மையில் யோசிப்பதில்லை.” என்றார் அவர்.

உயர்நிலை இரண்டாம் வகுப்பில் பயின்று வரும் மற்றொரு மாணவரான நேதானியேல் கான், தம்முடன் பயிலும் சக மாணவர்களுக்கு இத்தடை  அவ்வளவாக பிடிக்கவில்லை என்றாலும், மெல்லமெல்ல இந்த விதிமுறைக்கு அவர்கள் பழகிவருவதாகக் கூறினார்.

புதிய கல்வியாண்டு தொடங்கியதிலிருந்து, இடைவேளை மற்றும் இணைப் பாடத்திட்ட செயல்பாடு நேரங்கள் உள்பட, வகுப்பு நேரத்திற்கு வெளியே உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் கைப்பேசிகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை கடந்த ஆண்டு நவம்பரில் கல்வி அமைச்சு  அறிவித்தது.

குறிப்புச் சொற்கள்