கல்வி அமைச்சின் 36,000 ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு

கல்வி அமைச்சின் 36,000 ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு

2 mins read
3c8df17c-7d88-4fa7-81d7-22d8536bfb3b
இதற்கு முன்னர், ஊழியர்களின் சம்பளங்கள் 2022ஆம் ஆண்டில் மறுஆய்வுசெய்யப்பட்டன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கல்வி அமைச்சின் சில ஊழியர்கள் வரும் அக்டோபர் மாதத்திலிருந்து 2 முதல் 9 விழுக்காடு வரையிலான சம்பள உயர்வைப் பெறவிருக்கின்றனர்.

கல்வி அமைச்சு திங்கட்கிழமை (மார்ச் 16) வெளியிட்ட அறிக்கையில் அதனைத் தெரிவித்தது. ஏறக்குறைய 33,000 கல்வி அதிகாரிகள், 1,700 துணைக் கல்வியாளர்கள், 1,100 கல்வி அமைச்சின் பாலர்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருக்கு அக்டோபர் 1ஆம் தேதிமுதல் அந்தச் சம்பள மாற்றம் நடப்புக்கு வரும்.

அவர்களின் சம்பளத் தொகுப்புகள் தொடர்ந்து போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்வதே நோக்கம். சிறந்த ஆசிரியர்களைத் தொடர்ந்து ஈர்க்கவும் தக்கவைத்துக்கொள்ளவும் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு கூறியது. இதற்கு முன்னர், 2022ஆம் ஆண்டில் கல்வி அமைச்சைச் சார்ந்த ஊழியர்களின் சம்பளங்கள் மறுஆய்வு செய்யப்பட்டன.

“ஆசிரியர்கள் நமது கல்வி முறையில் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். சம்பள மாற்றங்களைத் தாண்டி, கற்றுக்கொள்ளவும் வளர்ச்சிகாணவும் கல்வி அமைச்சு தொடர்ந்து நமது அதிகாரிகளுக்கு வாய்ப்புகளை வழங்கும்,” என்று கல்வி அமைச்சு கூறியது.

“கல்வியாளர்களின் சம்பளங்கள் தொடர்ந்து போட்டித்தன்மையுடன் இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் வழக்கமாக அவற்றை மறுஆய்வு செய்வதுண்டு. அப்போதுதான் நாங்கள் உயர்தரக் கல்வியாளர்களை ஈர்த்துத் தக்கவைத்துக்கொள்ளமுடியும்,” என்று கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் கூறினார்.

இளம் மாணவர்களைப் பேணிவளர்ப்பதில் தாங்கள் செய்யும் அர்ப்பணிப்புகளுக்காகக் கல்வியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் அவர்.

அவர்களின் கருத்துகளைத் தொடர்ந்து கேட்டு, அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க அதிகம் செய்யப்போவதாகவும் திரு லீ கூறினார். இந்நிலையில், கல்வியாளர்களுக்கான சம்பள மறுஆய்வு தகுந்த நேரத்தில் இடம்பெற்றிருப்பதாக கல்விக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டேரல் டேவிட் கூறியுள்ளார்.

சிங்கப்பூர் ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மைக் திருமன், சம்பள மாற்றத்தைச் சங்கம் வரவேற்பதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே, கல்வி அமைச்சின் இந்த நடவடிக்கையை வரவேற்பதாகக் கூறிய சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் தனபால் குமார், கல்வி அமைச்சின் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமான ஒன்று எனக் குறிப்பிட்டார்.

“ஆசிரியர்களின் நலனிலும் வளர்ச்சியிலும் அமைச்சு கொண்டுள்ள அக்கறையை இது வெளிப்படுத்துகிறது. பல்வேறு பணிச்சுமைகளுக்கிடையே இந்த அறிவிப்பு ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். இது அவர்களை மேலும் ஊக்கப்படுத்த உதவும் என நம்புகிறேன்,” என்றார் திரு தனபால்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்