மாணவர் பராமரிப்பு நிறுவனத்துக்கு எதிராகச் சம்பளக் கோரிக்கைகள் குறித்து புகார்

மாணவர் பராமரிப்பு நிறுவனத்துக்கு எதிராகச் சம்பளக் கோரிக்கைகள் குறித்து புகார்

2 mins read
2160d435-b36c-4e90-89a4-4cc31156f9b5
ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 81ல் உள்ள ‘லிட்டில் ப்ரோஃபெசர்ஸ்’ கற்றல் நிலையம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

மாணவர் பராமரிப்பு நிறுவனமான ‘லிட்டில் ப்ரோஃபெசர்ஸ்’ கற்றல் நிலையத்தின் ஊழியர்களில் அதிகமானோர் சம்பளக் கோரிக்கைகள் குறித்து புகார் அளித்துள்ளனர்.

வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ் உத்தேசக் குற்றங்களுக்காக அந்த நிறுவனத்தை விசாரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்தப் புகார்கள் வந்துள்ளன.

மத்திய சேம நிதிக் கழகத்துடனும் மனிதவள அமைச்சுடனும் சச்சரவு நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணி வியாழக்கிழமை (மார்ச் 19) கூட்டாக அறிக்கை வெளியிட்டன.

அதில், மார்ச் 13ஆம் தேதி நிலவரப்படி, 123 சம்பளக் கோரிக்கைகளின் தொடர்பில் புகார் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னர், ஜனவரி மாதச் சம்பளங்களும் மத்திய சேமநிதிப் பங்களிப்புகளும் செலுத்தப்படாததன் தொடர்பில் 54 ஊழியர்கள் புகார்செய்திருந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் பிப்ரவரி 14ஆம் தேதியன்று முதன்முதலில் தெரிவித்திருந்தது.

சம்பளக் கோரிக்கைகளை உறுதிசெய்ய சச்சரவு நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணி ஊழியர்களுக்கு உதவுவதாக அறிக்கை குறிப்பிட்டது.

அந்த மாணவர் பராமரிப்பு நிறுவனத்தால் ஊழியர்களுக்குச் சம்பளங்களை வழங்கமுடியாவிட்டால், ஊழியர்களில் பெரும்பாலோர் குறுகிய கால நிவாரண நிதி அல்லது வெளிநாட்டு ஊழியர்கள் உதவி நிதி மூலம் நிதி உதவிக்குத் தகுதிபெறுவார்கள் என்றும் அது தெரிவித்தது.

‘லிட்டில் ப்ரோஃபெசர்ஸ்’, குறைந்தது எட்டுத் தொடக்கப்பள்ளிகளில் மாணவர் பராமரிப்பு நிலையங்களை நடத்தியது. அவற்றில் ‘வைட் சேண்ட்ஸ்’ தொடக்கப்பள்ளியும் ‘ஹொங் வென்’ பள்ளியும் அடங்கும்.

அதோடு, ஆறு தொடக்கப்பள்ளிகளில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் பாலர்பள்ளிகளில் உள்ள குழந்தைகளுக்கு முழு நாள் பராமரிப்புச் சேவைகளையும் அது வழங்கியது.

கிராஞ்சி, ஏங்கர் கிரீன், வாட்டர்வே, பொங்கோல் கோவ், ஜிங் ஷான், வெஸ்ட்வூட் ஆகிய தொடக்கப்பள்ளிகள் அவை.

குறிப்புச் சொற்கள்