இளம் சிங்கப்பூரர்களுக்கு 30% குறைந்த வாடகையில் அறைகள்

இளம் சிங்கப்பூரர்களுக்கு 30% குறைந்த வாடகையில் அறைகள்

2 mins read
5b895db7-bb0a-4347-8aea-eadf8e5e20fb
கோலிவூ பூன் லே வளாகத்தில் தங்குபவர்கள் சமையலறை, ஓய்வறை, உடற்பயிற்சிக்கூடம் போன்ற பொது இடங்களில் ஒன்றுகூடலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தன்னிச்சையாக வாழ விரும்பும் இளம் சிங்கப்பூரர்கள் 30 விழுக்காடு குறைந்த விலையில் அறைகளை வாடகைக்கு எடுத்துத் தங்குவதற்கான புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

21 முதல் 35 வயது வரையிலான சிங்கப்பூரர்களுக்குக் கட்டுப்படியான கட்டணத்தில் அறைகளை இரண்டு தனியார் நிறுவனங்கள் வழங்குகின்றன.

ஓர் அறைக்கான மாத வாடகை $1,800லிருந்து தொடங்குகிறது.

பூன் லே, புக்கிட் தீமா ஆகிய இரண்டு இடங்களில் இருக்கும் ‘கோலிவூ’ நிறுவனத்தின் அறைகள், ஜாலான் புசாரில் உள்ள ‘1925 குவாட்டர்ஸ்’ அறைகள் என மூன்று கூட்டு வாழ்விடங்களிலும் (Co-living properties) 100க்கும் மேற்பட்ட அறைகள் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்படவுள்ளன.

ஒற்றையர், தம்பதியர் என இருதரப்பினரும் பயன்பெறக்கூடிய வகையில் இரட்டைப் படுக்கை, குவீன்-சைஸ் (Queen-size) படுக்கை போன்ற வசதிகளை இளையர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

தேசிய இளையர் மன்றமும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சும் இணைந்து சனிக்கிழமை (ஜூலை 25) அறிவித்த ‘எஸ்ஜி இளையர் திட்டம்’ எனும் ஐந்தாண்டுத் திட்டத்தின் ஓர் அங்கமாக இது செயல்படுத்தப்படுகிறது.

இளையர்களின் தொழில், நல்வாழ்வு, உறவுகள் போன்ற பல வாழ்க்கை அம்சங்களுக்கு உதவும் வகையில், 20க்கும் மேற்பட்ட பல்வேறு முயற்சிகள் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

தன்னிச்சையாக வாழ விரும்பும் இளையர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2025 தேசிய இளையர் ஆய்வின்படி, தங்களுக்கென ஒரு சொந்த இடத்தை அமைத்துக்கொள்வதை இளையர்கள் தங்களின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகத் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றனர்.

இளையர்களிடையே சுருங்கிவரும் சமூக வட்டத்தை விரிவுபடுத்துவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்திற்காகக் கோலிவூ (Coliwoo) நிறுவனம் தனது பூன் லே வளாகத்தில் 70 அறைகளையும், புக்கிட் தீமா லூத்தரன் வளாகத்தில் 30 அறைகளையும் ஒதுக்கியுள்ளது.

அவற்றிற்கான மாத வாடகை $1,950லிருந்து தொடங்குகிறது. அத்துடன், பயனீட்டுக் கட்டணங்களையும் தனியாகச் செலுத்தவேண்டும்.

நிறுவனத்தின் 25 விழுக்காட்டு அறைகள் இத்திட்டத்திற்காகக் ஒதுக்கப்பட்டுள்ளது.

“இளம் சிங்கப்பூரர்களுக்கு ஆதரவளிப்பதோடு, வழக்கமாக நிறுவனத்தில் காலியாக இருக்கும் அறைகளின் விழுக்காட்டைக் குறைக்கவும் இத்திட்டம் பயனுள்ளதாக அமைகிறது,” என்று கோலிவூ நிறுவனத்தின் இயக்குநர் கெல்வின் லிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கோலிவூ பூன் லே வளாகத்தின் அனைத்து அறைகளிலும் இணைப்புக் கழிப்பறையுடன் மேசை, தொலைக்காட்சி, அலமாரி போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

விளையாட்டு இரவுகள், நடைப்பயணம் போன்ற சமூக நடவடிக்கைகளையும் கோலிவூ நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

தற்போது கோலிவூ நிறுவனத்தின் 10 விழுக்காட்டு அறைகளில் இளம் சிங்கப்பூரர்கள் தங்கியுள்ளனர். மற்ற அறைகளில் வெளிநாட்டு மாணவர்களும் வேலை பார்ப்பவர்களும் உள்ளனர்.

பெற்றோரைப் பிரிந்து தனியாக வாழ விரும்புவோரையும் தங்கள் இணையருடன் இணைந்து வாழ முயல்வோரையும் இத்திட்டம் ஈர்க்கும் என்று எதிர்பாப்பதாகத் திரு லிம் கூறினார்.

முதலில் விண்ணப்பம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://go.gov.sg/sgypaccommodationforyouths26 என்ற இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்