ஒட்டுமொத்தத் தனியார் குடியிருப்பு வீடுகளுக்கான விலைக் குறியீடு இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் 0.9 விழுக்காடு ஏற்றம் கண்டுள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் ஆணையம் வெளியிட்ட முன்னோடி மதிப்பீடுகளில் அந்த விகிதம் 0.3 விழுக்காடு எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
2025 நான்காம் காலாண்டில் விலைகள் 0.6 விழுக்காடு உயர்ந்த நிலையில் முதலாம் காலாண்டிலும் அந்த வளர்ச்சி தொடர்ந்தது.
நகர மறுசீரமைப்பு ஆணையம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) இதனைத் தெரிவித்தது.
புதிதாகத் தொடங்கப்பட்ட ‘பைனரி ரெசிடென்சஸ்’ மற்றும் ‘ரிவெல் தெம்பனிஸ்’ எக்சகியூட்டிவ் கூட்டுரிமை வீடுகளின் விற்பனை விறுவிறுப்பாக இருக்கும் என்று சொத்துச் சந்தை பகுப்பாய்வாளர்கள் எதிர்பார்த்ததால் ஆணையம் அவ்வாறு குறிப்பிட்டிருந்தது.
விலைகள் உயர்ந்த அதேவேளை, மத்திய கிழக்கு எரிசக்தி நெருக்கடி காரணமாக வீடுகளை வாங்குவோர் எச்சரிக்கையாக இருப்பதால் தனியார் வீட்டு விற்பனை மெதுவடைந்தது.
இவ்வாண்டின் முதலாம் காலாண்டில் 2,013 தனியார் குடியிருப்பு வீடுகளின் விற்பனை தொடங்கப்பட்டது. எக்சகியூட்டிவ் வீடுகள் அந்தக் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. அதற்கு முந்திய காலாண்டில் அந்த எண்ணிக்கை 2,940ஆக இருந்தது.
மேலும், 2026 முதலாம் காலாண்டில் இன்னும் கட்டிமுடிக்கப்படாத தனியார் வீடுகளின் எண்ணிக்கை 1,844ஆக இருந்தது. அது, அதற்கு முந்திய காலாண்டில் 2,632ஆக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
மறுவிற்பனையில் இடம்பெற்ற தனியார் வீடுகளின் எண்ணிக்கையும் முதலாம் காலாண்டில் 3,225 எனக் குறைந்தது. அதற்கு முந்தைய காலாண்டில் அந்த எண்ணிக்கை 3,529ஆக இருந்தது.
இருப்பினும், வீடு வாங்குவதில் காணப்படும் ஆர்வம் நீடிக்கிறது. தற்போதைக்கு, அடைமான வட்டி விகிதங்கள் 2022ஆம் ஆண்டிற்குப் பிறகு மிகக் குறைந்த அளவிலேயே நீடிப்பதாலும் எரிசக்தி நெருக்கடியின் பின்விளைவுகள் இன்னும் விரிவான அளவில் ஊடுருவத் தொடங்காததாலும் வீடு வாங்குவதில் உள்ள ஆர்வம் குறையாமல் நீடிப்பதுபோல் தெரிகிறது.

