ஜூலை 1 முதல் ஓய்வுபெறும் வயது 64ஆகவும் மறுவேலைவாய்ப்பு வயது 69ஆகவும் உயர்வு: டான் சீ லெங்

ஜூலை 1 முதல் ஓய்வுபெறும் வயது 64ஆகவும் மறுவேலைவாய்ப்பு வயது 69ஆகவும் உயர்வு: டான் சீ லெங்

3 mins read
f2130936-f1cb-4a1b-9f6f-0f934a06bd8d
மூத்த ஊழியர்களின் ஓய்வுக்கால சேமிப்பை அதிகரிக்க மத்திய சேமநிதி பங்களிப்பு விகிதங்கள் 2027ஆம் ஆண்டு முதல் உயர்த்தப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் ஓய்வுபெறும் வயது வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் 64ஆக உயர்த்தப்படும் என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 3) தெரிவித்தார். அதேபோல், மறுவேலைவாய்ப்பு வயது 69ஆக உயர்த்தப்படும்.

இதன் மூலம், 2030ஆம் ஆண்டிற்குள் ஓய்வுபெறும் வயதை 65ஆகவும் மறுவேலைவாய்ப்பு வயதை 70ஆகவும் உயர்த்தும் இலக்கை நோக்கி சிங்கப்பூர் செல்வதாக அவர் குறிப்பிட்டார்.

மனிதவள அமைச்சின் வருடாந்திர வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது பேசிய டாக்டர் டான், “இது நமது முதியவர்களுக்குக் கூடுதல் நீக்குப்போக்கையும் உறுதியையும் அளிக்கும் அதேவேளையில், அனுபவம் வாய்ந்த ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ள முதலாளிகளுக்கும் உதவும்,” என்றார்.

மனிதவள மூத்த துணையமைச்சர் கோ போ கூன் இது குறித்து கருத்துரைத்தார்.

தகுதியுள்ள மற்றும் தொடர்ந்து பணியாற்ற விரும்பும் 10 ஊழியர்களில் ஒன்பது பேருக்கு வெற்றிகரமாக மறுவேலைவாய்ப்பு வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த ஐந்து ஆண்டுகளில், 60களில் இருப்பவர்களின் ஊழியர் பங்கேற்பு விகிதம் 58 விழுக்காட்டிலிருந்து 60 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

மூத்த ஊழியர்களைத் தொடர்ந்து பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், மூத்தோர் வேலைவாய்ப்புச் சலுகைத் திட்டம் 2027ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முதியவர்களுக்குப் பகுதி நேர, நீக்குப்போக்கான வேலைத் தெரிவுகளை வழங்கும் முதலாளிகளுக்கு ஆதரவாக பகுதி நேர மறுவேலைவாய்ப்பு மானியம் 2027ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூத்த ஊழியர்களின் ஓய்வுக்கால சேமிப்பை அதிகரிக்க மத்திய சேமநிதி பங்களிப்பு விகிதங்கள் 2027ஆம் ஆண்டு முதல் உயர்த்தப்படும்.

55 முதல் 60 வயது வரையிலான ஊழியர்களுக்கான மத்திய சேமநிதி பங்களிப்பு விகிதம் 1.5 விழுக்காடு உயர்த்தப்படும்.

60 முதல் 65 வயது வரையிலான ஊழியர்களுக்கான மத்திய சேமநிதி பங்களிப்பு விகிதம் 1 விழுக்காடு உயர்த்தப்படும்.

இதன் மூலம், 2018ல் அமைக்கப்பட்ட மூத்த ஊழியர்கள் தொடர்பான முத்தரப்புப் பணிக்குழு பரிந்துரைத்த இலக்கை சிங்கப்பூர் எட்டியுள்ளது. மேலும், இந்த அதிகரிப்பால் முதலாளிகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவைக் குறைக்க, 2027ஆம் ஆண்டில் மத்திய சேமநிதிப் பங்களிப்பு அதிகரிப்பில் 50 விழுக்காட்டை அரசாங்கம் ஏற்கும்.

“2026ஆம் ஆண்டின் பிற்பகுதியில், 2027ஆம் ஆண்டிற்குப் பிந்தைய பிரிவினருக்கான புதிய ஓய்வுக்காலத் தொகைகளை அரசாங்கம் அறிவிக்கும். இது உறுப்பினர்கள் தங்கள் எதிர்காலத்தைத் திட்டமிட உதவும்.

“வாழ்க்கைத் தரம் உயர்ந்து வருவதால், எதிர்கால அடிப்படை ஓய்வுக்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான சேமிப்பை இந்தப் புதிய தொகைகள் சிறப்பாகப் பிரதிபலிக்கும்,” என்றார் அமைச்சர் டான்.

குறைவான மத்திய சேமநிதி சேமிப்பு கொண்ட 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய, தகுதி பெறுவோருக்கு அதிக ஆதரவை வழங்குவதற்காக, 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் மத்திய சேமநிதி நிரப்புத்தொகை முறையை அறிமுகப்படுத்தியது.

இவர்கள் டிசம்பர் மாதத்தில் தங்கள் மத்திய சேமநிதி ஓய்வுக்காலக் கணக்கு அல்லது சிறப்புக் கணக்கில் $1,500 வரை மசேநிதி நிரப்புத்தொகையைப் பெறுவார்கள்.

இந்தத் தொகை, பெறுநர்களின் மத்திய சேமநிதி ஓய்வுக்காலச் சேமிப்பு மற்றும் அவர்களின் குடியிருப்புச் சொத்தின் வருடாந்திர மதிப்பிற்கு ஏற்ப வகைப்படுத்தப்படும்.

குறிப்புச் சொற்கள்