கடினமான பகுதிகளில் எண்ணெய்ப் படலங்களை அகற்ற மூன்று மாதமாகும்: அமைச்சர்

கடினமான பகுதிகளில் எண்ணெய்ப் படலங்களை அகற்ற மூன்று மாதமாகும்: அமைச்சர்

3 mins read
feb5dbbf-4e37-45f1-ba60-d9cd1ab7a93b
ஓஎஸ்ஆர்எல் நிறுவனத்தின் சிறப்பு நிபுணர்கள் சிலோசோ கடற்கரை பாறைகளின் இடுக்குகளில் இருந்து எண்ணெப் படலங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். - படம்: சிங்கப்பூர் கடல்துறை துறைமுக ஆணையம்
Google News Preferred Icon

எண்ணெய்க் கசிவால் பாதிக்கப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகள் பெரும்பாலும் முடிந்துவிட்டதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்து உள்ளார். கடல் நீரில் இருந்து எண்ணெய்யையும் கரையில் எண்ணெய் கலந்த 550 டன் மணலையும் அப்புறப்படுத்தும் பணிகள் அவை.

400 டன் எண்ணெய், கடலில் கசிந்த சம்பவத்தில் கடினமான பகுதிகளை சுத்தம் செய்வதற்கான அடுத்த கட்டப் பணிகள் தொடங்க உள்ளன.

பாறை இடுக்குகள், அலைகரைகள் போன்ற எளிதில் அணுகமுடியாத பகுதிகளில் எண்ணெய்ப் படிவங்களை நீக்க வேண்டி இருப்பதால் அந்தப் பணிகள் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மணலின் ஆழத்தில் எண்ணெய் படிந்திருக்கக்கூடும் என்பதாலும் அவற்றை அங்கிருந்த அகற்ற அந்த அளவுக்குக் காலம் பிடிக்கும்.

அமைச்சர்நிலை செய்தியாளர் கூட்டத்தில் திங்கட்கிழமை (ஜூன் 24) பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, அடுத்த கட்டப் பணிகள் சிக்கல்கள் நிறைந்தவையாக இருக்கும் என்றார்.

மேலும், அந்தப் பணிகளுக்கு பயிற்சி பெற்ற பணியாளர்களும் தனித்துவம் வாய்ந்த சாதனங்களும் தேவைப்படும் என்றும் அவர் கூறினார்.

சுத்தப்படுத்தும் இறுதிக்கட்ட பணிகளின்போது, உறைந்த எண்ணெய்யிலும் மணலிலும் கலந்திருக்கும் கடினமான தார் பந்துகள் சல்லடை போன்றவற்றைப் பயன்படுத்தி அப்புறப்படுத்தப்படும்.

சுத்தம் செய்யும் பணிகள் நிறைவுற்றதும் பொதுமக்கள் நடமாடும் பகுதிகள் கட்டம் கட்டமாகத் திறக்கப்படும் என்றும் திருவாட்டி ஃபூ கூறினார்.

ஓரளவே பாதிக்கப்பட்ட ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் குறிப்பிட்ட சில பகுதிகள் போன்றவை முன்கூட்டியே திறக்கப்படலாம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடற்கரைப் பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டாலும் நீரின் தரம் வழக்கநிலைக்குத் திரும்பிய பின்னரே நீச்சல், நீர் தொடர்பான நடவடிக்கைகள் போன்றவை அனுமதிக்கப்படும் என்றும் அமைச்சர் ஃபூ குறிப்பிட்டார்.

நீரின் தரம், எண்ணெய்க் கசிவுக்கு முந்திய நிலைக்குத் திரும்பிவிட்டதா என்பதையும் ஒரு வார காலத்திற்கு அந்தத் தரம் நீடிக்கிறதா என்பதையும் அறிய நீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதிக்கப்பட உள்ளன.

தொண்டூழியர்களை ஈடுபடுத்தத் திட்டம்

இறுதிக்கட்ட சுத்தப்படுத்தும் பணிகளில் தொண்டூழியர்கள் ஈடுபடுத்தப்படலாம் என்றார் அமைச்சர்.

“பாதிக்கப்படாத பேரளவு மணல் அகற்றப்படுவதைத் தவிர்க்க பத்திரமாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவே சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருப்போருடன் தொண்டூழியர்களையும் ஈடுபடுத்தத் திட்டமிடுகிறோம்.

“வேலைகளை முடித்து கடற்கரைகளை விரைந்து திறக்க அது உதவும். மேலும் பணிகள் அனைத்தும் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதையும் தொண்டூழியர்களிடம் முறையான சாதனம் கொடுக்கப்பட்டதா எனப்தையும் உறுதி செய்வோம்,” என்றார் திருவாட்டி ஃபூ

கடந்த ஜூன் 14ஆம் தேதி இயந்திரக் கோளாறு காரணமாக பாசிர் பாஞ்சாங் படகுமுனையத்தில் நிறுத்தப்பட்டு இருந்த ‘மரின் ஹானர்’ என்னும் எண்ணெய்க் கப்பலுடன் நெதர்லாந்து கொடி தாங்கிய ‘வோக்ஸ் மேக்ஸிமா’ என்னும் தூர்வாரிக் கப்பல் மோதியது.

அதன் காரணமாக கப்பலின் ஒரு தொட்டியில் இருந்த எண்ணெய் கடலில் கசிந்தது. அதனைத் தொடர்ந்து, ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, லெப்ரடோர் இயற்கைவனம், கெப்பல் பே, செந்தோசாவின் தென்தீவுகள் போன்றவற்றின் கடற்கரைகளில் எண்ணெய்க் கறை படிந்தது.

குறிப்புச் சொற்கள்