பருவநிலை மாற்றம் தொடர்பான முயற்சிகளில் சமய அமைப்புகளுக்குப் பங்கு உண்டு: ரவி மேனன்

பருவநிலை மாற்றம் தொடர்பான முயற்சிகளில் சமய அமைப்புகளுக்குப் பங்கு உண்டு: ரவி மேனன்

2 mins read
1de497e5-7d33-4bdf-ac68-fd62e53fbfd2
‘பூமி நாள்’ அனுசரிப்பின்போது நடைபெற்ற கலந்துரையாடலில் திரு ரவி மேனன் (இடமிருந்து மூன்றாவது) உரையாற்றினார். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரின் சமய அமைப்புகள், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தனிநபர்கள் எடுக்கும் முடிவுகளில் முக்கியப் பங்கு வகிக்கலாம் என்று பருவநிலை மாற்றத்துக்கான சிங்கப்பூர்த் தூதர் ரவி மேனன் கூறியுள்ளார்.

சுற்றுப்புறத்தைப் பேணும் முயற்சிகளை மேற்கொள்ள சிங்கப்பூரின் சமய அமைப்புகள், சமயம் சார்ந்த கொள்கைகள் மூலம் தனிநபர்களை ஊக்குவிக்கலாம் என்றார் அவர்.

தனிநபர்களை ஊக்குவிக்கும் சமய அமைப்புகள்

இயற்கைக்கும் மனிதர்களுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றி சமய அமைப்புகள் போதிக்கலாம் என்றும் திரு மேனன் கூறினார்.

‘பூமி நாள்’ அனுசரிப்பின்போது இடம்பெற்ற சமயங்களுக்கு இடையிலான கலந்துரையாடலில் திரு மேனன் பேசினார். “பருவநிலை மாற்றம் என்பது வெறும் கொள்கை அல்ல. அது அறம் சார்ந்தது,” என்றார் அவர்.

சூரிய சக்தியைப் பயன்படுத்த ஊக்குவிப்பது, வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தோர் வெப்ப அலை தாக்கத்திலிருந்து தங்களையே பாதுகாத்துக்கொள்ள உதவுவது போன்ற பழக்கங்களை ஊக்குவிக்கலாம் என்றார் திரு மேனன்.

பருவநிலை மாற்றம் என்பது தேசிய எல்லைகளையோ வெவ்வேறு சமயங்களையோ சார்ந்தது அல்ல. அதைச் சமாளிக்க வெவ்வேறு சமயங்களும் வெவ்வேறு நாடுகளும் ஒன்றிணையவேண்டும் என்று திரு மேனன் வலியுறுத்தினார்.

“அனைத்து சமயங்களின் பொதுவான மொழி, அன்பு,” என்ற திரு மேனன், பொதுவான மனிதநேயத்தை அரவணைத்து ஒருவர்மீது ஒருவர் அக்கறையுடன் இருக்கவேண்டும் என்றார்.

சமயங்களுக்கு இடையிலான பூமி நாள் கலந்துரையாடலில் வெவ்வேறு சமயங்களைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சிங்கப்பூரின் கத்தோலிக்கத் தேவாலயத்தின் சமூக, சமுதாயப் பிரிவான சரிட்டாஸ் சிங்கப்பூர் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

கலாசார, சமுதாய, இளையர்த் துறை, நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறத் துறை ஆகியவற்றின் மூத்த நாடாளுமன்ற செயலாளர் கோ ஜன்யான், கலந்துரையாடலில் பங்கேற்றோர் பருவநிலை மாற்றத்தில் பங்காற்றும்படி கேட்டுக்கொண்டார்.

இந்து ஆலோசனை வாரியம் செங்குட்டுவன் கன்னியப்பன், நீடித்த நிலைத்தன்மையை மேம்படுத்தும் பழக்கங்களைப் பகிர்ந்துகொள்ள சிங்கப்பூரில் உள்ள வெவ்வேறு சமய அமைப்புகளுக்குக் கலந்துரையாடல் நல்ல தளம் அமைத்துத் தந்ததாகக் கூறினார்.

சிங்கப்பூரில் உள்ள இந்து ஆலயங்கள் பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்க பல்வேறு வழிகளைக் கையாள்வதாகச் சொன்ன அவர், பிளாஸ்டிக், ஸ்டைரொஃபோம் தட்டுகளுக்குப் பதிலாக மக்கக்கூடிய பொருள்களில் செய்யப்பட்ட தட்டுகளை ஆலயங்கள் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்