கவர்ச்சியான புதிய அம்சங்களோடு ஜப்பானிய, சீனத் தோட்டங்கள் மீண்டும் திறப்பு

கவர்ச்சியான புதிய அம்சங்களோடு ஜப்பானிய, சீனத் தோட்டங்கள் மீண்டும் திறப்பு

2 mins read
f0cb0674-93e0-4f78-b451-b1e8d2743b35
மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கும் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயும் ஜூரோங் லேக் தோட்டங்களில் மரம் நடுகின்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 4
Google News Preferred Icon

புதுப்பிக்கப்பட்ட சீன, ஜப்பானியத் தோட்டங்கள் (சைனீஸ் கார்டன், ஜப்பனீஸ் கார்டன்) ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 8) மீண்டும் திறக்கப்பட்டன.

புதுப்பிப்புப் பணிகளுக்கு முன்பு பொதுமக்களிடமிருந்து சுமார் 14,000 கருத்துகள் சேகரிக்கப்பட்ட பிறகு புதுப்பிப்புப் பணிகள் இடம்பெற்றன. இரு தோட்டங்களிலும் புதிய, பழைய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளாக புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்றன. இரட்டை பகோடா கோபுரங்கள் போன்ற பழைய அம்சங்களுடன் பல்வேறு நடவடிக்கைகளுக்கான அரங்கம் போன்ற புதிய அம்சங்களும் தாமான் ஜூரோங்கில் உள்ள சீன, ஜப்பானியத் தோட்டங்களில் இடம்பெற்றுள்ளன. சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்களும் புதியனவற்றில் அடங்கும்.

ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற தோட்டங்களின் திறப்பு நிகழ்ச்சியில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்வைச் சித்திரிக்கும் நினைவுத் தகடை வெளியிட்டு ‘சிஸ்கியம் அக்குவியம்’ மரத்தை நட்ட திரு லீ, இது பலகாலமாகக் காத்திருந்த மைல்கல் என்றார்.

மேம்பாட்டுப் பணிகளுக்கு முன்பு 1960களில் ஜூரோங், சதுப்பு நிலங்களுடன் அடர்ந்த காடாகத்தான் இருந்தது என்றும் திரு லீ குறிப்பிட்டார்.

இவ்விரு தோட்டங்களும் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் குடியிருப்பு வட்டாரம் ஒன்றில் இடம்பெறும் முதல் தேசியத் தோட்டங்களான ஜூரோங் லேக் தோட்டங்களை (ஜூரோங் லேக் கார்டன்ஸ்) அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்துவிட்டதாக தேசிய பூங்காக் கழகம் செய்தி அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. 90 ஹெக்டர் பரப்பளவைக் கொண்ட ஜூரோங் லேக் தோட்டங்களில் லேக்சைட் தோட்டமும் அடங்கும்.

சீன, ஜப்பானியத் தோட்டங்கள், தற்போது லேக்சைட் தோட்டம் என்றழைக்கப்படும் ஜூரோங் லேக் பூங்காவுடன் இணைக்கப்படும் என்றும் மாற்றியமைக்கப்பட்ட இப்பகுதி ஜூரோங் லேக் தோட்டங்களாக உருவெடுக்கும் என்று பிரதமராக இருந்தபோது திரு லீ, 2014ஆம் ஆண்டு தேசிய தினப் பேரணி உரையில் தெரிவித்தார்.

புதிய ஜூரோங் லேக் தோட்டங்கள், நவீன ஜூரோங்கைச் சித்திரிக்கும் ஒன்றாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“என்றையும்விட இப்போது ஜூரோங் லேக் தோட்டங்களை நாம் மக்களின் தோட்டமாகப் பார்க்கலாம். மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்டது. இதில் நம் அனைவருக்கும் பங்குண்டு. எல்லோரும் இங்கு வரலாம்,” என்று மூத்த அமைச்சர் லீ சொன்னார்.

குறிப்புச் சொற்கள்