வட்ட ரயில் பாதையில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) முதல் வழக்கமான சேவை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ரயில் செல்லும் சுரங்கப்பாதையை வலுப்படுத்தும் பணிகள் திட்டமிட்ட தேதிக்கு (ஏப்ரல் 19) முன்னதாகவே முடிக்கப்பட்டதை அடுத்து ஏப்ரல் 10 முதல் ரயில் சேவை வழக்க நிலைக்குத் திரும்புகிறது.
மவுண்ட்பேட்டன், டகோட்டா, பாயா லேபார் ரயில் நிலையங்களுக்கு இடையிலான சுரங்கப்பாதைகளை வலுப்படுத்தும் பணிகள் முன்கூட்டியே முடிவடையும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் மார்ச் 26 தெரிவித்திருந்தது
“பராமரிப்புப் பணியில் செயல்படும் குழுக்கள் சிக்கலான செயல்முறைகளைக் கையாள நன்கு பழகிக்கொண்டனர். அதனால் வேலைகள் வேகமாக நடக்கிறது,” என்று ஆணையம் குறிப்பிட்டிருந்தது.
இதற்கிடையே பராமரிப்புப் பணிகள் காரணமாகப் பாதிக்கப்பட்ட ரயில் நிலையங்களில் வழங்கப்பட்டிருந்த நான்கு இடைநிறுத்தப் பேருந்துகள் ஏப்ரல் 13 வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் ஏப்ரல் 10 முதல் இடைநிறுத்தப் பேருந்துகளின் சேவை எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் ஏப்ரல் 11 முதல் வார இறுதி நாள்களில் மட்டும் வட்ட ரயில் பாதையில் சேவை நேரம் குறைவாக இருக்கும்.
வட்ட ரயில் பாதையில் திறக்கப்படவுள்ள மூன்று நிலையங்களிலும் சோதனை ஓட்டங்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதால் சேவை நேரங்கள் வார இறுதி நாள்களில் குறைக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
வார இறுதி நாள்களில் காலை 9 மணி முதல் இரவு 11 மணிவரை ரயில் சேவை இருக்கும். மூன்று நிலையங்களும் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

