தேசிய சேவையாளர்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ வகைப்பாட்டு முறை

தேசிய சேவையாளர்களுக்குப் புதுப்பிக்கப்பட்ட மருத்துவ வகைப்பாட்டு முறை

3 mins read
bdceab6a-83bd-4ac5-a3b4-691e76abab81
மருத்துவ வகைப்பாட்டு நிலையத்தில் தேசிய சேவைக்கான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் இளையரைத் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் சந்தித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய சேவையாளர்களுக்கான மருத்துவ வகைப்பாட்டு முறையைச் சிங்கப்பூர் புதுப்பிக்க உள்ளது.

தற்போது நடப்பில் உள்ள ‘ஃபிசிக்கல் எம்பிளாய்மென்ட் ஸ்டாண்டர்டு’ (PES) முறை, மருத்துவப் பரிசோதனை மூலம் அவர்களின் உடல்நலத்தையும் உடலுறுதியையும் சோதித்து அதற்கேற்ப தேசிய சேவை தொடர்பான பல்வேறு வேலைகளில் பொருத்தமான வேலையை நிர்ணயிக்க உதவுகிறது. இனி, மேலும் துல்லியமான புதிய அமைப்பு அறிமுகமாகிறது.

மருத்துவ வகைப்பாட்டு நிலையத்தில் திங்கட்கிழமை (ஏப்ரல் 13), தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் இதை அறிவித்தார். சிங்கப்பூர் ஆயுதப்படை, உள்துறைக் குழுவின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப இந்த மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

மருத்துவ வகைப்பாட்டு நிலையத்தில் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் செய்தியாளர்களிடம் பேசினார்.
மருத்துவ வகைப்பாட்டு நிலையத்தில் திங்கட்கிழமை (ஏப்ரல் 13) தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் செய்தியாளர்களிடம் பேசினார். - படம்: சாவ்பாவ்

தொழில்நுட்ப முன்னேற்றங்கள், புதிய போர் உத்திகள் ஆகியவற்றால் உடல் வலிமை சார்ந்த செயல்பாடுகள் மட்டுமே இனி முக்கியமாக இருக்காது என்று அமைச்சர் சான் கூறினார். சேவையாளர்கள் தங்களின் முழுத் திறனை வெளிப்படுத்தவும், அவர்களுக்குப் பொருத்தமான பணிகளில் ஈடுபடவும் இந்த மாற்றம் உதவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய சேவைக்கான மருத்துவப் பரிசோதனையை 2026 ஜூன் மாத இறுதியில் தொடங்குவோருக்கு இந்தப் புதிய முறை பொருந்தும்.

முதல் குழுவினர் சிங்கப்பூர் ஆயுதப்படையில் 2027 அக்டோபரிலும் உள்துறைக் குழுவில் 2027 நவம்பரிலும் இணைவார்கள். இதன் மூலம் ஆண்டுதோறும் ஏறத்தாழ 1,200 பேருக்கு முன்பு கிடைக்காத பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உருவாகும்.

அனைத்து நிரந்தர தேசிய சேவையாளர்களும் 2028க்குள் புதிய முறைக்கு மாற்றப்படுவார்கள். தற்போது முழுநேரச் சேவையில் இருப்போருக்கு மருத்துவ நிலையில் மாற்றமில்லையெனில், அவர்களின் ‘பெஸ்’ தகுதி நிலை அப்படியே தொடரும்.

புதிய முறையின் அடிப்படையில், சேவையில் சேரவிருப்போர் ஒரே ஒரு ‘பெஸ்’ மதிப்பீட்டிற்குப் பதிலாக மூன்று விதமான மதிப்பீடுகளைப் பெறுவார்கள். மருத்துவ ரீதியான தகுதி அல்லது தகுதியின்மை, உடல் செயல்பாட்டுத் திறனை விளக்கும் குறிப்பிட்ட மருத்துவ விலக்குகள், எட்டு வாரச் சேவைக் குறைப்பிற்கான தகுதி ஆகியவை அதில் அடங்கும்.

இதன்மூலம் ஏறத்தாழ 2,000 பணிகளை மறுவடிவமைப்பு செய்ய முடியும். லேசான மருத்துவப் பிரச்சினைகள் அல்லது குணமடைந்த காயங்கள் காரணமாக முன்பு விதிக்கப்பட்டிருந்த பரவலான கட்டுப்பாடுகளும் இப்போது தளர்த்தப்படலாம்.

எடுத்துக்காட்டாக, வேர்க்கடலை ஒவ்வாமை காரணமாக முன்பு ‘பெஸ் சி’ (PES C) தகுதி பெற்ற ஒருவர், தற்போது தனிநபர் உடலுறுதிச் சோதனை (IPPT), இயல்பான தடைகளைக் கடந்து முன்னேறும் பயிற்சி (Standard Obstacle Course) ஆகியவற்றைப் பாதுகாப்பாக மேற்கொள்ளும் திறன் கொண்டவர் என மதிப்பிடப்படலாம். இதன்வழி முன்பு தகுதிபெறாத பணிகளுக்கும் அவர் தகுதிபெறலாம்.

மத்திய மனிதவளத் தளத்தில் உள்ள வட்டாரச் சுகாதார நிலையத்தில், தேசிய சேவைக்கான மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளும் இளையரைத் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் பார்வையிட்டார். தற்காப்பு அமைச்சு அதிகாரிகளும் மருத்துவர்களும் அவருடன் உள்ளனர்.
மத்திய மனிதவளத் தளத்தில் உள்ள வட்டாரச் சுகாதார நிலையத்தில், தேசிய சேவைக்கான மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ளும் இளையரைத் தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் பார்வையிட்டார். தற்காப்பு அமைச்சு அதிகாரிகளும் மருத்துவர்களும் அவருடன் உள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

2021ஆம் ஆண்டு மருத்துவ வகைப்பாட்டு முறையைப் புதுப்பிப்பது குறித்து அமைச்சு முன்னுரைத்தது. அதையடுத்து, அதன் தொடர்பிலான பணிகளை வரையறுக்கவும் முன்னோட்டச் சோதனைகளைக் கவனமாக நடத்தவும் பல ஆண்டுகள் திட்டமிட்டுச் செலவிடப்பட்டதாக அமைச்சர் சான் குறிப்பிட்டார்.

இந்த மாற்றத்தின் மூலம் சேவையாளர்கள் செய்யக்கூடிய, செய்ய முடியாத பணிகளைப் பற்றிய மதிப்பீடு இப்போது மிகவும் துல்லியமானதாக மாறியுள்ளதாக நம்பிக்கை தெரிவித்த அவர், பாதுகாப்பு எந்த நிலையிலும் சமரசம் செய்யப்படாது என்றும் உறுதியளித்தார்.

மனிதவளப் பற்றாக்குறை காரணமாக இந்த மாற்றம் செய்யப்படவில்லை என்பதையும் இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

“உண்மையைச் சொல்லப்போனால், 18 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய எண்ணிக்கை எங்களுக்குத் தெரியும். அந்த எண்ணிக்கைக்கு ஏற்பவே எங்கள் போர் முறைகளை வடிவமைக்கிறோம்,” என்று திரு சான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்