ரயில் பணிக்குழுவின் பரிந்துரைகள் வலுசேர்ப்பவை: நிபுணர்கள்

ரயில் பணிக்குழுவின் பரிந்துரைகள் வலுசேர்ப்பவை: நிபுணர்கள்

2 mins read
9b85226e-bff1-4807-a0c5-7c4401d7e0b2
பணிக்குழுவின் பரிந்துரைகள் புதிதல்ல என்றாலும் அறிக்கையைப் பொதுமக்களுக்கு வெளியிட்டது நல்லது எனப் பாராட்டப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

அரசாங்கத்தால் பிப்ரவரி 13ஆம் தேதி ஏற்கப்பட்ட ரயில் நம்பகத்தன்மைப் பணிக்குழுவின் பரிந்துரைகள் விரிவாக இருப்பதாகவும், சேவைத் தடைகளைக் குறைக்கும் இலக்கில் இது சரியான நடவடிக்கை எனவும் போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வசதிகளைப் புதுப்பிப்பது போன்ற சில பரிந்துரைகளால் அன்றாடப் பயணங்களுக்குப் பாதிப்பு ஏற்படுமோ எனப் பயணிகள் சிலர் கவலைப்படுவதாகக் கூறப்படுகிறது.

பணிக்குழுவின் பரிந்துரைகள் விரிவாக இருப்பதாகச் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் கட்டுமான, சுற்றுப்புறப் பொறியியல் துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் ரேமண்ட் ஓங் தெரிவித்தார். பலதரப்பட்ட விவகாரங்களையும் அவை ஆராய்வதாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக, முக்கியக் கூறுகளாகத் திகழும் ரயில், சமிக்ஞை, மின்சக்தி ஆகியவற்றின் கட்டமைப்புகளைப் புதுப்பிப்பதற்குப் பணிக்குழு முன்னுரிமை தருவதாக அவர் குறிப்பிட்டார். அடித்தளமாக இயங்கும் இந்த மூன்று கட்டமைப்புகளில் ஏதேனும் ஒன்று செயலிழந்தாலும், ரயில் சேவை கடுமையாகப் பாதிக்கப்படும்.

ரயில் நம்பகத்தன்மை என்பது ஒருமுறை மட்டுமே செய்யப்படும் பணித்திட்டமன்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிரத்தையுடன் செயல்படுத்தப்பட்டால், இந்தப் பரிந்துரைகள் கட்டமைப்பு மீள்திறனையும் செயல்பாட்டு ரீதியில் பதிலளிக்கும் திறனையும் அடுத்த பல ஆண்டுகளுக்கு வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.

ரயில் தொடர்பான தளவாடங்களைப் புதுப்பிப்பது தவிர, வேறு சில பரிந்துரைகளையும் பணிக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சேவைத் தடங்கலின்போது சேவையை மீண்டும் வழக்கநிலைக்குக் கொண்டுவருவது, ரயில்களின் உதிரிப்பாகங்களை நிர்வகிப்பது, ரயில் ஊழியரணிக்குக் கூடுதலான வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பில் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

ரயில் துறையைப் பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு இந்தப் பரிந்துரைகள் புதிதல்ல என்று சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் (SUSS) போக்குவரத்துப் பொருளியல் நிபுணர் வால்ட்டர் தெசேரா கூறினார்.

இந்தப் பரிந்துரைகள் உடனடித் தீர்வாக அமையாது எனவும் அவர் தெரிவித்தார்.

இருந்தபோதும், பணிக்குழுவின் அறிக்கையைப் பொதுமக்களுக்கு வெளியிட்டது சிறப்பானது என அவர் பாராட்டினார்.

குறிப்புச் சொற்கள்
ரயில் நிலையம்பணிக்குழுநிபுணர்எம்ஆர்டி