மரபுகளை உயிர்ப்பிக்கும் இளையர்களுக்கு அங்கீகாரம்

மரபுகளை உயிர்ப்பிக்கும் இளையர்களுக்கு அங்கீகாரம்

2 mins read
இளையர் விருது பெற்ற இந்தியக் கலைஞர்கள்
f5aa6d06-d1c2-4d72-a071-56ad6e95cf2b
கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோவிடமிருந்து விருது பெறும் நிரஞ்சன் பாண்டியன். - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

வேகமான மாற்றங்களைக் காணும் நவீன சிங்கப்பூரில் பாரம்பரியக் கலைகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் உன்னதப் பொறுப்பை சில இளையர்கள் தங்களின் கைகளில் எடுத்துள்ளனர்.

தேசிய மரபுடைமைக் கழகம் முதன்முறையாக வழங்கியுள்ள தொட்டுணர முடியாத கலாசார மரபுடைமையில் சிறந்த இளையர் விருது நமது வாழும் மரபுகளை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆறு இளம் சாதனையாளர்களின் அர்ப்பணிப்பையும், ஆர்வத்தையும் அங்கீகரித்தது.

கடந்த காலத்தின் வேர்களிலிருந்து எதிர்காலத்திற்கான புதிய பாதைகளை உருவாக்கும் அந்த ஆறு இளையர்கள் தங்களின் கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பரந்த சமூகத்துடன் தொடர்ந்து ஈடுபட்டு இதர இளையர்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் திகழ்கின்றனர்.

புதன்கிழமை (மார்ச் 18) என்டியுசி நிலையத்தில் விருது விழா இடம்பெற்றது. அதில் கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இளையர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

விருது பெற்ற இளையர்கள் ஒரு கோப்பை, சான்றிதழுடன், மூன்று ஆண்டுகளுக்குள் பயன்படுத்துவதற்கான $20,000 வரையிலான திட்ட மானியத்தையும் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றனர்.

35 வயதும் அதற்கும் குறைவான வயதுடைய தனிநபர்களை விருது அங்கீகரிக்கிறது.

விருது விழாவில் சிறப்புரையாற்றிய தற்காலிக அமைச்சர் டேவிட், சிங்கப்பூரின் பல்லின கலாசாரப் பின்னலே தேசிய வலிமை, அடையாளத்தின் அடித்தளமாக விளங்குவதாக வலியுறுத்தினார்.

இதனால் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு பாரம்பரியக் கலைகளையும் மரபுடைமையையும் மேலும் ஆழப்படுத்தி அவற்றை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்தல், கலாசாரங்களுக்கு இடையிலான ஆழமான புரிந்துணர்வையும், பரஸ்பர நன்மதிப்பையும் ஊக்குவித்தல், பல்லின கலாசாரக் கலைகளையும் மரபுடைமையையும் மேம்படுத்த உள்ளூர் கலைஞர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் ஆதரவளித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தவிருப்பதாக திரு டேவிட் தெரிவித்தார்.

விருது பெற்றவர்களில் இரு இந்திய இளையர்கள் பானுப்ரியா பொன்னரசு, 35, நிரஞ்சன் பாண்டியன், 32, அடங்குவர்.

கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோவிடமிருந்து விருது பெறும் பானுப்ரியா பொன்னரசு.
கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோவிடமிருந்து விருது பெறும் பானுப்ரியா பொன்னரசு. - படம்: சாவ்பாவ்

பரதநாட்டியம், கதக் நடனங்களில் நிபுணத்துவம் பெற்று பாரம்பரிய இந்திய நடனக் கலைகளில் இருபது ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட ஒரு பன்முகக் கலைஞர் பானுப்ரியா.

இந்தியப் பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்ற புல்லாங்குழல் கலைஞர் நிரஞ்சன் தனது இசைக்குழுக்கள், கலைத் திட்டங்களில் பிற இளம் கலைஞர்களையும் தீவிரமாக ஈடுபடுத்தி வருகிறார்.

ஒலிப் பொறியியல், இசைக்கோர்வை, இசையமைப்பு போன்ற பல்வேறு பொறுப்புகளிலும் இளையர்களைப் பங்காற்றச் செய்யும் அவர் பிரம்மாஸ்த்ரா ஆர்ட்ஸ் ஹவுஸ் அமைப்பின் இணை நிறுவனர், படைப்பாக்க இயக்குநராக உள்ளார்.

குறிப்புச் சொற்கள்
மரபுடைமைஅங்கீகாரம்விருது

தொடர்புடைய செய்திகள்