தமிழ்ப் பள்ளிவாசல்களில் ரமலான் ஏற்பாடுகள் மும்முரம்

பென்கூலன் பள்ளிவாசலில் 11 தானிய நோன்புக் கஞ்சி

தமிழ்ப் பள்ளிவாசல்களில் ரமலான் ஏற்பாடுகள் மும்முரம்

2 mins read
30ba182b-d344-4773-bd14-e29bc756d7e3
உடல்நலத்தை இவ்வாண்டின் ஏற்பாடுகளுக்கான கருப்பொருளாகக் கொண்டிருப்பதாக பென்கூலன் பள்ளிவாசல் தெரிவித்தது. - படம்: த.கவி
Google News Preferred Icon

நோன்பு நோற்கும் முஸ்லிம் அன்பர்கள் வியாழக்கிழமை (பிப்ரவரி 19) தொடங்கும் புனித ரமலான் வழக்கங்களை நல்ல உடல்நலத்துடன் கடைப்பிடிக்க வேண்டும் எனும் நோக்கத்தில், நோன்புத் திறப்புக்குச் சிறந்த சத்துணவை வழங்க பென்கூலன் பள்ளிவாசல் திட்டமிட்டுள்ளது.

முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் கூடுதலான மக்கள் அமர்ந்து உண்பதற்கான வசதிகளும் அங்கு விரிவுபடுத்தப்படவுள்ளன.

நோன்பு திறக்கும் முஸ்லிம்களுடன் எல்லா இன, சமயத்தவரும் உடன்வந்து உணவைத் தாராளமாகச் சாப்பிடலாம் என்று பென்கூலன் பள்ளிவாசல் தலைவர் முஹம்மது ரஃபீக் தெரிவித்தார்.

“நம் இந்தியர்கள் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. எனவே, ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

பள்ளிவாசல் வளாகத்திலேயே 50 முதல் 60 நாற்காலிகள்வரை போட்டு, அன்பர்கள் அமர்ந்து உண்ணும் வசதி அமைக்கப்பட்டுள்ளதாகவும் திரு ரஃபீக் கூறினார்.

தமிழ்நாட்டிலிருந்து சமையற்கலைஞர்கள் கிட்டத்தட்ட 11 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் குழந்தைகள் விரும்பும் உணவுவகைகளும் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 2,000 பேருக்குக் கஞ்சி காய்ச்சவுள்ளோம். அதில் 1,000 பேருக்கான கஞ்சியை வீடுகளுக்கு வாங்கிச் சென்றுவிடுவர்.

“ஒவ்வொரு நாளும் சமையலுக்கு ஓர் உணவுப் பட்டியலை வைத்துள்ளோம். பிரியாணி, நெய்ச்சோறு, தேங்காய்ச் சோறு, பரோட்டா, தோசை, இடியப்பம், சமோசா எனப் பலவகை இந்திய உணவுகள் வெவ்வேறு நாள்களில் பரிமாறப்படும்,” என்று அவர் கூறினார்.

அப்துல் கஃபூர் பள்ளிவாசலில் இருமுறை தராவீஹ் தொழுகை

லிட்டில் இந்தியா வட்டாரத்திலுள்ள அப்துல் கஃபூர் பள்ளிவாசலில், தராவீஹ் தொழுகை வரும் புதன்கிழமை ரமலான் மாதத் தொடக்கம் முதல் நோன்புத் திறப்புக்குப் பிறகு இருமுறை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 9 மணி முதல் 10.15 மணி வரை நடைபெறும் வழக்கமான தராவீஹ் தொழுகையை அடுத்து, இரவு 11 மணிக்கும் நள்ளிரவு 11.50 மணிக்கும் இடையே இரண்டாவது தொழுகை நடைபெறும் எனப் பள்ளிவாசல் நிர்வாகம் குறிப்பிட்டது.

ஜாமிஆ சூலியா பள்ளிவாசலிலிருந்து நோன்புக் கஞ்சி, வரும் வியாழக்கிழமை முதல் சிறப்பாக அப்துல் கஃபூர் பள்ளிவாசலுக்குத் தருவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அங்கூலியா பள்ளிவாசலில் ஏற்பாடுகள்

ரமலானின் தொடக்க நாளுக்கு முந்தைய நாளான 18ஆம் தேதி இரவு, அங்குலியா பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை இடம்பெறும் என்று அப்பள்ளிவாசலைச் சேர்ந்த துணை இமாம் ஃபாருக் அகமது தெரிவித்தார்.

“தராவீஹ் தொழுகை ரமலான் மாதம் முழுவதும் 30 நாள்கள் நடைபெறும். இதில் தொழுகையை வழிநடத்தக்கூடிய இமாம்கள் ரமலான் மாதத்தின் முப்பது நாள்களும் திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து ஓதுவார்கள்,” என்று திரு ஃபாருக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்