மூன்று உடற்பிடிப்பு நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள்

மூன்று உடற்பிடிப்பு நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள்

1 mins read
343af4ff-80f1-4002-a1a7-15eefc94b2d4
பூன் லே (இடது), ஜூரோங் வெஸ்ட் வட்டாரங்களில் செயல்படும் உடற்பிடிப்பு நிலையங்களில் காவல்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பூன் லே, ஜூரோங் வெஸ்ட் வட்டாரங்களில் உள்ள மூன்று உடற்பிடிப்பு நிலையங்களில் சட்டவிரோதச் சேவைகளை வழங்கியதாக நம்பப்படும் பெண்கள் ஐவரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். அவர்கள் 36லிருந்து 51 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

சம்பவம் தொடர்பில் மூன்று உடற்பிடிப்பு நிலைய உரிமையாளர்களையும் அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

பூன் லேயில் உள்ள உடற்பிடிப்பு நிலையம் ஒன்றில் ஜூன் 4ஆம் தேதி, ஜூரோங் காவல்துறைப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த விலைப் பட்டியலில் சட்டவிரோதச் சேவைகளுக்கான கட்டணங்களும் குறிப்பிடப்பட்டிருந்ததாகச் கூறப்படுகிறது.

பொதுமக்களின் பார்வைக்கு மறைவாகவும் மங்கலான வெளிச்சத்திலும் உடற்பிடிப்பு நிலையத்தில் படுக்கைகள் இருந்ததாகத் தெரிகிறது. அங்கிருந்த பெண்கள் நால்வரிடம் அதிகாரிகள் தனிப்பட்ட விவரங்களைக் கேட்டறிந்தனர்.

அதையடுத்து, ஒரு மணி நேரத்துக்குப்பின் ஜூரோங் வெஸ்ட் கடைவீடு ஒன்றில் செயல்பட்ட மற்றோர் உடற்பிடிப்பு நிலையத்திற்கு அதிகாரிகள் சென்றனர். அங்குக் கழிவறை வசதியுடன் சிறிய அறைகள் காணப்பட்டன.

“சட்டவிரோத நடவடிக்கைகளை முடக்க உடற்பிடிப்புத் தளங்களுக்கான விதிமுறைகளைக் காவல்துறை இவ்வாண்டுப் பிற்பாதியில் கடுமையாக்கும்,” என்றார் ஜூரோங் காவல்துறைப் பிரிவின் உதவி ஆணையர் செர்கியஸ் வாட்.

உடற்பிடிப்பு நிலையங்கள், சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்ற அவர், குற்றவாளிகள்மீது சட்ட ரீதியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

குறிப்புச் சொற்கள்
உடற்பிடிப்புசோதனைநடவடிக்கை