குவாண்டாஸ்: சிங்கப்பூரில் முதல் விமானச் சிப்பந்தித் தளம்

குவாண்டாஸ்: சிங்கப்பூரில் முதல் விமானச் சிப்பந்தித் தளம்

1 mins read
eb07b351-dc28-492b-afd3-17e6e719f9e2
முதலாம் ஆண்டிலேயே, 120 ஊழியர்களைப் பணியில் அமர்த்த நோக்கம் கொண்டுள்ளதாகக் குவாண்டாஸ் கூறியது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

குவாண்டாஸ் நிறுவனம் முதல்முறையாக சிங்கப்பூரில் வரும் செப்டம்பரிலிருந்து விமானச் சிப்பந்தித் தளம் ஒன்றை அறிமுகம் செய்யவிருக்கிறது.

ஐந்தாண்டுகளில் 650 ஊழியர்களைக் கொண்டிருக்க திட்டம் இருப்பதாக அது தெரிவித்தது.

ஆஸ்திரேலிய விமான நிறுவனமான குவாண்டாஸ், முதல் ஆண்டிலேயே 120 ஊழியர்களைப் பணியில் அமர்த்த நோக்கம் கொண்டுள்ளதாகக் கூறியது. அவர்களில் சிலர், ஆஸ்திரேலியாவில் உள்ள அதன் ‘ஜெட்ஸ்டார் ஏர்வேஸ்’ மலிவுச் சேவை விமான நிறுவனத்திலிருந்து வருவார்கள் என்றது அது.

சிங்கப்பூரில் தளம் கொண்டுள்ள குவாண்டாஸ் விமானச் சிப்பந்திகள், சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான விமானச் சேவைகளில் பணிபுரிவர். அவர்களுக்குப் போட்டித்தன்மைமிக்க சம்பளங்கள் கொடுக்கப்படும் என்று குவாண்டாஸ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் கூறியது.

புதிய சிங்கப்பூர் விமானச் சிப்பந்தித் தளம் வளர்ந்துவரும் குவாண்டாசின் அனைத்துலகக் கட்டமைப்பு மேலும் திறம்படச் செயல்படவும், விமானச் சேவை இடையூறுகளை மேலும் விரைவில் தீர்க்கவும் வகைசெய்யும் என்று அந்நிறுவனத்தின் அனைத்துலகப் பிரிவின் தலைமை நிர்வாகி கேம் வேலஸ் கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு வெளியே, சிங்கப்பூர்தான் குவாண்டாசின் ஆகப் பெரிய அனைத்துலக நடுவமாகும்.

சிங்கப்பூரில் தளம் கொண்டுள்ள ‘ஜெட்ஸ்டார் ஏர்வேஸ்’ நிறுவனத்தில் பணிபுரியும் கிட்டத்தட்ட 50 விமானச் சிப்பந்திகளுக்குத் தனது நிறுவனத்தில் புதிய பணிகளை வழங்க எதிர்பார்ப்பதாக குவாண்டாஸ் தெரிவித்தது.

‘ஜெட்ஸ்டார் ஏசியா’ நிறுவனத்தின் முன்னாள் விமானச் சிப்பந்திகளும் புதிய தளத்தில் வேலையில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அது கூறியது.

குறிப்புச் சொற்கள்
விமானச் சேவைசிங்கப்பூர்குவான்டாஸ்