மக்கள் செயல் கட்சி பருவநிலைச் செயற்குழு ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) ஏற்பாடு செய்த சமூக நிகழ்ச்சியில், தியோங் பாருவைச் சேர்ந்த ஏறத்தாழ 800 குடியிருப்பாளர்கள் திரண்டனர்.
‘பருவநிலைச் செயல்பாட்டு தினம்’ என்ற தலைப்பில் எங் ஹூன் ஸ்திரீட்டில் நடந்த அறிமுக நிகழ்வில் ‘ஈக்கோவொர்க்ஸ்’ என்ற புதிய வீட்டுச் சாதன விற்பனையாளர் உட்பட ஒன்பது வர்த்தகர்கள் பங்கேற்றனர்.
சாலை ஓரத்தில் நடந்த விழாவில் அன்றாட வாழ்வில் எவ்வாறு முறையான செயல்பாடுகளைக் கடைப்பிடிக்கலாம் என்பதை மக்கள் அறிந்துகொண்டனர்.
உதாரணமாக வீட்டில் வளர்க்கக்கூடிய காய்கறிச் செடிகள், பயன்படுத்திய துணிமணிகளை வாங்குதல் போன்ற பழக்கவழக்கங்களைக் குறிப்பிடலாம்.
பங்கேற்ற வர்த்தகர்களில் சமூகப் பண்ணை நடத்துநரான ‘எடிபல் கார்டன் சிட்டி’, பசுமை அழகுச் சாதனத் தயாரிப்பாளரான ‘த பவ்டர் ஷாம்பூ’ போன்ற பிரபல நிறுவனங்கள் அடங்கும்.
இயற்கையின் நிலைத்தன்மையைப் பாதுகாக்க, நடைமுறைக்கேற்ற செயல்பாடுகளில் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைந்து பங்கேற்க வைக்கும் இலக்குடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக மக்கள் செயல் கட்சி பருவநிலைச் செயற்குழுவின் இணைத் தலைவர் போ லீ சான் கூறினார்.
உலக அளவில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளத் தண்ணீரை மிச்சப்படுத்தி, மின்சாரப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தி சிங்கப்பூரர்கள் பங்காற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
மக்கள் செயல் கட்சி, கடந்த ஜனவரி 21ஆம் தேதி இந்தப் பருவநிலைச் செயற்குழுவைத் தொடங்கிவைத்தது. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளப் பல நடவடிக்கைகளைச் செயற்குழு திட்டமிட்டுச் செயல்படுத்தி வருகிறது.

