சிங்கப்பூரில் மருத்துவச் சிகிச்சைகளுக்குச் செலவு செய்த கட்டணத்தைத் திரும்பப் பெற முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அதிகரிப்பதாலும் மருத்துவச் சலுகைகள் விரிவடைவதாலும் பெரும்பாலான தனியார் காப்புறுதி நிறுவனங்கள் ஒருங்கிணைந்த ஷீல்ட் திட்டத்துக்கான சந்தாக்களை இவ்வாண்டு உயர்த்தியுள்ளன.
ஏழில் ஆறு காப்புறுதி நிறுவனங்களிடம் முன்வைக்கப்பட்ட மருத்துவச் சிகிச்சை கட்டணங்களுக்கான கோரிக்கைகள் கடந்த ஆண்டு 9 விழுக்காட்டிலிருந்து 24 விழுக்காட்டுக்கு அதிகரித்தது.
அதை முன்னிட்டு அந்த ஆறு காப்புறுதி நிறுவனங்களும் அவற்றின் ஒருங்கிணைந்த திட்டம், ரைடர் திட்டம் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்தன. அதை முன்னிட்டு இவ்வாண்டு சந்தாவை உயர்த்தியிருப்பதை நிறுவனங்கள் உறுதிசெய்தன.
ராஃபிள்ஸ் சுகாதாரக் காப்புறுதி நிறுவனம் மட்டும் சந்தாவில் எந்த மாற்றமும் செய்யவில்லை. மருத்துவக் கட்டணங்களைப் பெறுவதற்காக நிறுவனத்திடம் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 18 விழுக்காடு சரிந்தது.
2018ஆம் ஆண்டு காப்புறுதிச் சந்தையில் கால்பதித்த ராஃபிள்ஸ் சுகாதாரக் காப்புறுதி நிறுவனம், அதன் சாந்தாவில் எவ்வித மாற்றமும் செய்யப்போவதில்லை என்றது.
அவ்வாறு தொடர்ச்சியாக ஈராண்டுக்குச் சந்தாவை உயர்த்தாத ஒரே நிறுவனம் ராஃபிள்ஸ் சுகாதாரக் காப்புறுதி நிறுவனம்.
சிங்கப்பூரர்கள் அனைவரும் மெடிஷீல்ட் லைஃப் திட்டத்தின்கீழ் காப்புறுதியைப் பெற்றுள்ளனர். மருத்துவமனைச் செலவு, குறிப்பிட்ட வெளிநோயாளி சிகிச்சை, ஒலி ஊடுகதிர் சிகிச்சை, சிறுநீரகச் சுத்திகரிப்பு சிகிச்சை ஆகியவற்றின் கட்டணங்களைத் திட்டம் பார்த்துக்கொள்கிறது.
மெடிஷீல்ட் லைஃப் திட்டத்துக்கு அப்பாற்பட்டு வழங்கப்படும் தனியார் காப்புறுதி நிறுவனங்களின் திட்டங்களைத் தெரிவுசெய்வது கட்டாயம் அல்ல.
தொடர்புடைய செய்திகள்
ஒருங்கிணைந்த திட்டத்தைத் தவிர காப்புறுதி நிறுவனங்கள் ரைடர் திட்டத்தையும் விற்கின்றன. அது நோயாளியின் மருத்துவக் கட்டணங்களின் ஒரு பகுதியைச் சமாளிக்க உதவுகிறது.
அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து இன்கம் இன்சூரன்ஸ் அதன் ஒருங்கிணைந்த திட்டத்துக்கான சந்தாவை 4.5 விழுக்காடாக அதிகரித்தது.
சிங்லைஃப் நிறுவனம் அதன் சந்தாவை 10 விழுக்காட்டுக்கும் மேல் உயர்த்தியது.

