பிரித்தம் சிங்கின் குற்றம் நிரூபிக்கப்பட்டது குறித்து நாடாளுமன்றத்தில் பேசப்படும்: இந்திராணி

2 mins read
3ed4c08c-0843-4e9b-8da0-e08ee795ba58
பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங். - படங்கள்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு / ‌ஷின் மின்

பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்த குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.

அது குறித்து வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் பேசப்படும் என்று அவைத் தலைவர் இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் பாட்டாளிக் கட்சி தனிப்பட்ட முறையில் என்ன நடவடிக்கை எடுத்தாலும் எதிர்க்கட்சித் தலைவரான பிரித்தம் சிங்கின் செயல்களையும் அவர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட பிறகு பொய்யுரைத்த குற்றம் நிரூபிக்கப்பட்டதையும் நாடாளுமன்றம் கருத்தில்கொண்டு செயல்படுவது அவசியம் என்றார் திருவாட்டி இந்திராணி.

சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட பிறகு பொய்யுரைப்பது கடுமையாகப் பார்க்கப்படவேண்டிய ஒன்று என அவர் குறிப்பிட்டார்.

“சில நாடுகளில் பொய் சொல்லி, ஏமாற்றி, வெளிப்படையாக சட்டத்தை மீறிய தலைவர்கள் சட்ட ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ பின்விளைவுகளைச் சந்திக்காமல் இருக்கலாம். சிங்கப்பூரில் இது ஏற்றுக்கொள்ளப்படாது,” என்று திருவாட்டி இந்திராணி சுட்டினார்.

சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட பிறகு பொய்யுரைத்ததாக திரு சிங் மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளில் கடந்த பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதை அமைச்சர் இந்திராணி ராஜா சுட்டிக்காட்டினார். தீர்ப்புக்கு எதிராக திரு சிங்கின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது. அவர் தமக்கு விதிக்கப்பட்ட 14,000 வெள்ளி அபராதத்தைச் செலுத்தினார்.

இவ்வழக்கின் தகவல்கள் கவலை தருபவையாக இருக்கின்றன என்றார் பிரதமர் அலுவலக அமைச்சரும் இரண்டாம் நிதி அமைச்சருமான திருவாட்டி இந்திராணி.

நீதிமன்றம் வெளியே கொண்டுவந்த தகவல்களும் திரு சிங் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதும், சட்டத்தை நிலைநாட்டி நேர்மையையும் கண்ணியத்தையும் கடைப்பிடிக்கவேண்டும் என்பதை எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நினைவூட்டுவதாக திரு இந்திராணி சுட்டினார்.

உண்மையாக இல்லாத உறுப்பினர்களை உரிய வகையில் கவனிக்க பாட்டாளிக் கட்சி, தங்களுக்கென வழிமுறைகளை வைத்திருப்பதாகவும் திருவாட்டி இந்திராணி சொன்னார். தவறான நடத்தை காரணமாக, அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பதவி விலகியதை அவர் குறிப்பிட்டார்.

அவ்விருவரும் பதவி விலகாமல் இருந்திருந்தால் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பர் என்று திரு சிங் தெரிவித்திருந்ததையும் திருவாட்டி இந்திராணி எடுத்துச் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்