எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், சிஎன்ஏ நடத்திய ஒரு நிகழ்ச்சியில் கூறிய கருத்துகளுக்கு நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
தாம் முன்வைத்த கருத்து நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கருதப்படலாம் என்று ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டார்.
நீதிமன்றத்தின் நேர்மையையும் உரிமையையும் அவமதிக்கும் விதத்தில் தமது கருத்து இருந்திருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்வதாக திரு சிங் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் முழுமனத்துடன் நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கேட்பதாகக் கூறிய அவர், எதிர்காலத்தில் அத்தகைய கருத்துகளைத் தவிர்க்கப்போவதாகச் சொன்னார்.
நவம்பர் 5ஆம் தேதி ஒளிபரப்பான ‘த அஸெம்பிலி’ என்ற நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட நேர்காணலின்போது பொய்ச் சாட்சி கூறிய வழக்குத் தொடர்பில் திரு சிங்கிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
நிகழ்ச்சியின்போது, உலகில் உள்ள எந்த நீதிமன்றத்தைக் காட்டிலும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் பெரிது என்று தாம் நம்புவதாக திரு சிங் கூறினார்.
வழக்குத் தொடர்பில் மக்களுக்குத் தம்மீதுள்ள எண்ணம் என்ன என்பதை மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமது பாட்டாளிக் கட்சிக்குக் கிடைத்த ஆதரவு வெளிப்படுத்துவதாகவும் அவர் சொன்னார்.
நீதிமன்றத்தையும் மக்கள் எண்ணத்தையும் ஒப்பிட்டு திரு சிங் பேசியதை சட்ட அமைச்சர் எட்வின் டோங் குறைகூறினார்.
தொடர்புடைய செய்திகள்
திரு சிங் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துரைத்ததாகவும் தலைமைச் சட்ட அதிகாரி தெரிவித்தார். அதையடுத்து மீடியாகார்ப் நிறுவனமும் மன்னிப்புக் கேட்டு அந்த நேர்காணலை ஒளிபரப்பிலிருந்து அகற்றியது.
நிகழ்ச்சியின்போது திரு சிங் கூறிய கருத்துகள் மிகவும் தவறானவை என்றும் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட கட்டமைப்பில் அத்தகைய கருத்துகளுக்கு இடமில்லை என்றும் சட்ட அமைச்சு சனிக்கிழமை (டிசம்பர் 13) அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
திரு சிங்கின் கருத்துகள் நீதிமன்றத்தின் தீர்ப்பை இழிவுபடுத்துவதாகவும் சிங்கப்பூரின் சட்டக் கட்டமைப்புமீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைப்பதாகவும் உள்ளது என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் இதற்குமுன் கூறியிருந்ததையும் சட்ட அமைச்சு சுட்டியது.
அத்தகைய கருத்துகளை ஒருபோதும் ஏற்கவே முடியாது என்று சட்ட அமைச்சு திட்டவட்டமாகக் குறிப்பிட்டது.
நவம்பர் 28ஆம் தேதி திரு சிங் மன்னிப்புக் கேட்கும்படி தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் (ஏஜிசி) அறிக்கை வெளியிட்டது.
அதையடுத்து திரு சிங்கின் மன்னிப்பை ஏஜிசி ஏற்றுக்கொண்டது.

