தைப்பூசத் திருநாளைக் கொண்டாடும் இந்துக்களுக்கு பிரதமர் லாரன்ஸ் வோங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) இன்ஸ்டகிராமில் பதிவிட்ட அவர் இந்து சமூகத்தினர் பலருக்கும் தைப்பூசம் என்பது சமய நம்பிக்கைக்கும் சுயசிந்தனைக்கும் ஒரு முக்கியமான நாள் என்பதைச் சுட்டினார்.
வழிபாடு, விரதம் இருத்தல், காவடிகளையும் பால்குடங்களையும் சுமப்பது போன்ற செயல்கள் மூலம் இத்திருநாள் ஆழ்ந்த பக்தி, கட்டுப்பாட்டுடனும் நன்றியுணர்வோடும் கொண்டாடப்படுவதாக அவர் கூறினார்.
“இந்த நாளில் வெளிப்படும் அமைதியான மனவலிமையும் விடாமுயற்சியும் நாம் அனைவரும் போற்றக்கூடிய பணிவு, மீள்திறன், பிறருக்குச் சேவையாற்றுதல் போன்ற பண்புநலன்களை வெளிப்படுத்துகின்றன.
“தைப்பூசத்தைக் கொண்டாடும் அனைவருக்கும், தங்களது குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் ஆசி நிறைந்த, அர்த்தமுள்ள திருநாள் அமைய வாழ்த்துகள்,” என்றார் பிரதமர் வோங்.
தைப்பூசத் திருநாளில் வாழ்த்து தெரிவித்த இதர தலைவர்களில் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கும் அடங்குவார்.
“இன்று தைப்பூசம். பக்தி, நம்பிக்கை, தியாகத்தின் அடையாளமான முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு மங்கலகரமான திருநாள். பக்தர்கள் ஊர்வலங்கள் மற்றும் காவடிகளை எடுப்பதன் மூலம் தங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் மனவலிமையையும் வெளிப்படுத்துகின்றனர்.
“இந்தத் தைப்பூசம், இதனைக் கடைப்பிடிக்கும் அனைவருக்கும் ஆசீர்வாதத்தை வழங்கட்டும். அனைத்துப் பக்தர்களுக்கும் அர்த்தமுள்ள, ஆசி நிறைந்த தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்,” என்றார் மூத்த அமைச்சர் லீ.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் உள்ள இந்து சமூகத்தினரால் கொண்டாடப்படும் ஒரு புனிதமான திருவிழா தைப்பூசம் என்று கலாசார, சமூக, இளையர்துறை தற்காலிக அமைச்சர் டேவிட் நியோ ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
“ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலிலிருந்து அருள்மிகு தெண்டாயுதபாணி கோவில் வரையிலான 3.2 கி.மீ. தூர ஊர்வலத்தில் பக்தர்கள் காவடிகளையும் பால்குடங்களையும் சுமந்து செல்கின்றனர்.
“பக்தி நிறைந்த இந்த வலிமையான பயணத்திற்குப் பின்னால், ஒருங்கிணைப்புக் குழு, ஆலயக் குழுக்களின் பல மாதகால முன்னேற்பாடுகள் உள்ளன. ஊர்வலம் முழுவதும் பக்தர்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதிசெய்வதற்காக இவர்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றனர்.
“இத்தகைய பன்முகத்தன்மை கொண்ட சமயத் திருவிழாக்கள் கொண்டாடப்படுவது, சிங்கப்பூரில் நாம் போற்றிப் பாதுகாக்கும் செழுமையான கலாசார ஒருமைப்பாட்டை நமக்கு நினைவூட்டுகிறது,” என்றார் திரு நியோ.
தைப்பூசம் என்பது தமிழ் இந்து சமூகத்தினரால் பக்தி, வழிபாடு, நன்றியுணர்வோடு கடைப்பிடிக்கப்படும் ஒரு புனிதமான திருவிழா என்று சட்ட அமைச்சர் எட்வின் டோங் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
இது நம்பிக்கை, கட்டுப்பாடு, ஆன்மிக வலிமையின் மிகச் சிறந்த வெளிப்பாடு என்று சொன்ன அவர், “பக்தர்கள் சடங்குகளிலும் ஊர்வலங்களிலும் பங்கேற்கும் இந்தத் திருநாள், மனவுறுதி, பணிவு, சமூக ஒற்றுமை ஆகியவற்றை நமக்கு நினைவூட்டுகிறது.
“இந்தச் சிறப்புமிக்கத் தருணம் அனைவருக்கும் அமைதியையும் ஆசீர்வாதத்தையும் வழங்கட்டும்,” என்று வாழ்த்தினார்.

