ஆசியான் அமைப்பு, ஒற்றுமையாக இல்லாவிட்டால் நம்பகத்தன்மையை இழக்க நேரிடும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் எச்சரித்திருக்கிறார்.
ஆசியான் அதன் முக்கியத்துவத்தைக் கட்டிக்காக்க வேண்டும்; வேறுபாடுகளைக் களைவதிலும் அமைதியை நிலைநாட்டுவதிலும் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
உலக அளவில் நிச்சயமற்ற சூழல் அதிகரித்துவரும் நிலையில் ஆசியான் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம் என்று திரு வோங் சொன்னார்.
அவ்வாறு இல்லையென்றால் உலக அரங்கில் ஆசியான் அதன் நம்பகத்தன்மையையும் காலத்திற்கேற்பச் செயல்படும் தன்மையையும் இழக்கும் அபாயம் இருப்பதாக அவர் கூறினார்.
கோலாலம்பூரில் நடைபெறும் 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் முதல் நாள் முடிவில் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பில் திரு வோங் அந்தக் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
தகவல் மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு, திங்கட்கிழமை (அக்டோபர் 27) வெளியிட்ட அறிக்கையில் திரு வோங்கின் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையில் அண்மையில் நிலவிய எல்லைப் பதற்றத்திற்கும் மியன்மாரில் தொடரும் அரசியல் நெருக்கடிக்கும் விரைவில் தீர்வுகாணப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கம்போடியாவும் தாய்லாந்தும் எல்லைப் பகுதியில் பகைமைப் போக்கைக் கைவிட ஒப்புக்கொண்டன. பிணைபிடிக்கப்பட்ட படைவீரர்களை விடுவிக்கவும் அவை இணங்கின. ஆசியான் மாநாட்டுக்கு இடையே நடந்த சந்திப்பில் இரு தரப்பும் அதன் தொடர்பிலான உடன்பாட்டில் கையெழுத்திட்டன.
தொடர்புடைய செய்திகள்
உடன்பாடு எட்டப்பட்டதை வரவேற்ற திரு வோங், பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கண்டதில் மலேசியாவின் முயற்சிகளைப் பாராட்டினார். இருப்பினும் அது ஒரு தொடக்கமே என்றார் அவர்.
“இன்னும் நெடுந்தொலைவு உள்ளது. பதற்றத்தைக் குறைக்க இரு தரப்பும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதற்குச் சிங்கப்பூர் ஊக்குவிக்கிறது. அவை வேறுபாடுகளைக் களைய அமைதியான வழிகளை நாடவேண்டும்,” என்று பிரதமர் வோங் கேட்டுக்கொண்டார்.
மியன்மாரைப் பொறுத்தவரை, தேர்ந்தெடுக்கப்பட்ட திருவாட்டி ஆங் சான் சூச்சியின் அரசாங்கத்தை 2021ஆம் ஆண்டு ராணுவம் கவிழ்த்ததிலிருந்தே அங்குக் கொந்தளிப்பு நிலவுகிறது. ஆயுதப் போராட்டம் தலைதூக்கியது.
வன்முறையைத் தணிப்பதற்கு உடனடி முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று திரு வோங் கூறினார்.
மனிதநேய அமைப்புகள் நாட்டிற்குள் நுழைய அனுமதி தரப்பட வேண்டும்; உரையாடலுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

