மத்திய கிழக்கு மோதல் குறித்து மலேசியப் பிரதமருடன் பிரதமர் வோங் ஆலோசனை

மத்திய கிழக்கு மோதல் குறித்து மலேசியப் பிரதமருடன் பிரதமர் வோங் ஆலோசனை

2 mins read
40c8bd02-587a-4d28-a29f-1aeeae3c1315
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் புதன்கிழமை (மார்ச் 25) தொலைபேசியில் உரையாடினார் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: லாரன்ஸ் வோங்/ஃபேஸ்புக்
Google News Preferred Icon

மத்திய கிழக்குப் போர்ச் சூழல் தொடர்பில் ஆக அண்மை நிலவரம் குறித்துப் பிரதமர் லாரன்ஸ் வோங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் புதன்கிழமை (மார்ச் 25) தொலைபேசிவழி ஆலோசனை நடத்தினார்.

எரிசக்தி விநியோகம், பொருளியலில் ஏற்பட்டுள்ள நெருக்குதல்களுக்கு இடையில், வட்டார நிலைத்தன்மையைப் பாதுகாக்கத் தலைவர்கள் இருவரும் உறுதிபூண்டனர்.

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைவதால் ஏற்படக்கூடிய ஆபத்துக் குறித்து அவர்கள் பேசினர். உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, இருதரப்பு ரீதியாகவும் ஆசியான் வழியாகவும் மக்களின் வாழ்வாதாரத்தையும் வட்டார அமைதியையும் பாதுகாக்க இன்னும் என்ன செய்யலாம் என்பது குறித்தும் தலைவர்கள் இருவரும் ஆக்கபூர்வமான கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர். இதுகுறித்துப் பிரதமர் வோங் வியாழக்கிழமை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

ஹைனானில் நடைபெறும் போ ஆவ் மாநாட்டில் உரையாற்றுவதற்காகப் பிரதமர் வோங் சீனா சென்ற சிறிது நேரத்தில், திரு அன்வாருடன் அவர் தொலைபேசியில் உரையாடினார். சிங்கப்பூரும் மலேசியாவும் தங்களுக்கு இடையிலான முக்கிய விவகாரங்களில் தொடர்ந்து நெருக்கமாகச் செயல்படும் என்றும் பிரதமர் வோங் குறிப்பிட்டார்.

இந்த உரையாடல் குறித்துத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட திரு அன்வார், “ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டிருப்பது குறித்தும் முக்கிய உட்கட்டமைப்புகள்மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்தும் இருவரும் ஆழ்ந்த அக்கறை தெரிவித்தோம்.

“இத்தகைய நடவடிக்கைகள் உலகளாவிய எண்ணெய்ச் சந்தையை நிலைகுலையச் செய்வதோடு, வட்டார எரிசக்திப் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும்,” என்றார்.

“எந்தவொரு சர்ச்சைக்கும் பேச்சுவார்த்தை, அரசதந்திர ரீதியிலான நடவடிக்கைகள் மூலமே தீர்வுகாண வேண்டும் என்பதில் நானும் பிரதமர் வோங்கும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளோம்,” என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்
லாரன்ஸ் வோங்அன்வார் இப்ராகிம்மத்திய கிழக்குபோர்