மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 20) பயணம் மேற்கொண்ட பிரதமர் லாரன்ஸ் வோங், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமைச் சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்தவும் வட்டார ரீதியிலான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் தங்கள் கடப்பாட்டை இருவரும் உறுதிப்படுத்தினர்.
பல்வேறு விவகாரங்கள் குறித்து வெளிப்படையான கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள இச்சந்திப்பு வாய்ப்பளித்ததாகப் பிரதமர் அன்வாருக்குப் பிரதமர் வோங் நன்றி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.
கோலாலம்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கர்கோசா ஸ்ரீ நெகாரா மாளிகையில் தம்முடன் இணைந்து நோன்பு துறக்க அழைப்பு விடுத்ததற்கும், தமக்கு அளித்த அன்பான உபசரிப்பிற்கும் திரு அன்வாருக்குப் பிரதமர் வோங் நன்றி கூறினார்.
திரு அன்வாருக்கும் அனைத்து மலேசியர்களுக்கும் புனித ரமலான் மாத வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், திரு அன்வாருடனான அடுத்த சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகப் பிரதமர் வோங் தெரிவித்தார்.
இரு தலைவர்களும் கடைசியாக 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சந்தித்தனர். அப்போது சிங்கப்பூர்-மலேசியா தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்புக்காக திரு அன்வார் சிங்கப்பூர் வந்திருந்தார்.
ஆக்கபூர்வமான உணர்வு, பரஸ்பர மரியாதை மற்றும் நல்லெண்ணத்துடன் முன்னோக்கிச் செல்வதை வலியுறுத்திய இரு பிரதமர்களும், ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடரவும் ஓய்வுத்தளச் சந்திப்பின்போது இணங்கினர் .
சுகாதாரப் பராமரிப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இரு தலைவர்களும் நீர் விநியோகம், வான்வெளி மற்றும் கடல் எல்லைகள் ஆகிய நிலுவையில் உள்ள மூன்று இருதரப்பு விவகாரங்கள் குறித்த தங்கள் நிலைப்பாடுகளை விளக்கினர். மேலும் அவை குறித்த தற்போதைய விவாதங்கள் பற்றியும் எடுத்துரைத்தனர்.

