பொருளியல் சவால்களை ஒன்றாக எதிர்கொள்ள பிரதமர் வோங் அழைப்பு

பொருளியல் சவால்களை ஒன்றாக எதிர்கொள்ள பிரதமர் வோங் அழைப்பு

2 mins read
34e31722-62c4-4788-af2f-7c29b9bf28e5
48-ஆவது ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தின் தொடக்க விழாவின்போது மியன்மார் வெளியுறவு அமைச்சின் நிரந்தரச் செயலாளர் யூ ஹாவ் கான் சும், மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், தாய்லாந்துப் பிரதமர் அனுத்தின் சார்ன்விராகுல், கிழக்குத் திமோர் பிரதமர் சனானா குஸ்மாவ், வியட்னாம் பிரதமர் லீ மின் ஹுங், பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், சிங்கப்பூர்ப் பிரதமர் லாரன்ஸ் வோங், புருணை சுல்தான் ஹசனல் போல்கியா, இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, கம்போடியப் பிரதமர் ஹுன் மானெட், லாவோஸ் பிரதமர் சோனெக்சே சிபண்டோன் ஆகியோர் குழுப் படத்திற்காக நிற்கின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

பொருளியல் இடையூறுகளும் திகைப்புகளும் ஏற்படக்கூடிய புதிய வழக்கநிலைக்காக ஆசியான், பரந்த, ஆழமான வட்டார ஒத்துழைப்பு வழி தயாராக வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங், ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தின்போது தெரிவித்தார்.

ஒருங்கிணைப்பைக் கூடுதலாக மேற்கொள்வது, எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்துவது, ஆசியான் வட்டாரத்திற்குள்ளான தளவாட விநியோகத்தை ஆதரிப்பது ஆகியவற்றுக்காகத் திரு வோங் வேண்டுகோள் விடுத்தார்.

கொவிட்-19, அமெரிக்காவின் வர்த்தக வரிகள், தற்போதைய மத்திய கிழக்குப் பூசல் போன்ற நிகழ்வுகளை எதிர்கொள்ளும் மீள்திறனை இந்நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்று அவர், 48வது முறையாக நடைபெறும் ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தின்போது கூறினார்.

இடையூறுகள், திகைப்புகள், கொந்தளிப்புகள் போன்றவை கூடுதல் அளவில் இருக்கும் என்பது எதிர்வரும் உலகப் பொருளியலின் உண்மை நிலை என்று அவர் கூறினார்.

இந்தச் சூழலில் நமது ஒட்டுமொத்த மீள்திறனை அதிகரிக்க ஆசியான் கூடுதலாகச் செய்ய வேண்டும் என்றும் பிரதமர் வோங் கூறினார்.

பிலிப்பீன்சில் தேசிய அளவிலான அவசரநிலை நிலவும் இந்நேரத்தில், மத்திய கிழக்குப் பூசலின் விளைவுகளைப் பற்றிய கலந்துரையாடல் தலையாய அங்கம் வகித்தன.

தங்கள் எரிசக்தித் தேவையில் பெரும்பகுதியை வளைகுடா நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் தென்கிழக்காசிய நாடுகள், ஈரானியப் போர், ஹோர்முஸ் (Hormuz) நீரிணைப் பிரச்சினை ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள எரிசக்தி விநியோக நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மோதலில் குடிமக்களை இழந்த உறுப்பு நாடுகளுக்குப் பிரதமர் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டார்.

“இந்த நெருக்கடி விரைவில் முடிவுக்கு வரும் என்று நாம் அனைவரும் நம்புகிறோம். ஆயினும், இதன் தாக்கம் மேலும் சிறிது காலத்திற்குத் தொடரும் என்பதற்கு நாம் மனத்தளவில் தயாராக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையே ஆசியான், தனது ஒருங்கிணைப்பு முயற்சிகளைத் தீவிரப்படுத்தலாம் என்றும் பிரதமர் கூறினார்.

ஆசியான் சரக்கு வர்த்தக ஒப்பந்தத்திற்கு விரைவாக ஒப்புதல் அளித்து, அதனை இவ்வாண்டிற்குள்ளாகவே நடப்புக்குக் கொண்டுவரலாம் என்று அவர் தெரிவித்தார்.

உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்களின் வர்த்தகக் கடப்பாடுகளை (ATIGA) ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது.

‘அடிகா’வுக்காகப் பாடுபடுவதாலும் அதையும் தாண்டிப் போவதாலும் ஆசியானின் ஒருங்கிணைப்பு, ஒன்றாகப் பணியாற்றும் உறுதி, பிரச்சினைகளின்போதும் ஒருமைப்பாடு ஆகியவை குறித்த நம்பிக்கையை முதலீட்டாளர்களுக்கு அளிக்க முடியும் என்றார் பிரதமர்.

தட்டுப்பாடும் அவசரநிலையும் நிலவும் காலகட்டங்களில் ஆசியான் உறுப்பு நாடுகள் இத்தகைய முறைகளை நாடலாம் என்று பிரதமர் லாரன்ஸ வோங் கூறினார். வட்டார வர்த்தக உடன்பாட்டை அடித்தளமாகக் கொண்டு, மேலும் செயல்படுமாறு ஆசியான் நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில்கூட ஏற்றுமதித் தடைகள் இருக்காது என்பதற்கும் திறந்த சந்தைகளுக்கும் உத்தரவாதம் அளிப்பதோடு, இருபக்க ஆதரவு வழங்கும் மற்ற ஒப்பந்தங்களில் ஒருமித்த சிந்தனையுடைய நாடுகள் இணையலாம் என்றார்.

குறிப்புச் சொற்கள்
ஆசியான்பொருளியல்PM WONGஅழைப்பு