பொதுவாக பிடிஎஸ்டி (post-traumatic stress disorder) எனும் மனநலப் பிரச்சினைக்கு அளிக்கப்படும் சிகிச்சையை மாற்றியமைத்து, அதைச் சிறிதளவு மனச்சோர்வு உள்ளவர்களுக்குப் பயன்படுத்துவது குறித்து மனநலக் கழக ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
அதன் மூலம் சிறிய அளவிலான மனச்சோர்வு மோசமடையாமல் பார்த்துக்கொள்ள முடியுமா என்பதை அறிவது இலக்காகும். பிள்ளைப் பருவத்தில் மனத்தைப் பாதிக்கக்கூடிய வருத்தம் தரும் சவாலான சூழல்களையும் நிகழ்வுகளையும் எதிர்கொண்டவர்களுக்கும் இது பொருந்தும்.
இந்த ஆய்வில் பங்கேற்போருக்கு உணர்வுகளைச் சீராக்கும் உத்திகளும் பிறருடன் தொடர்புகொள்ளத் தேவையான திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் கற்றுத் தரப்படும்.
இளம் வயதில் வருத்தம் தரும் சவாலான சூழல்கள், நிகழ்வுகளை எதிர்கொள்வதும், மனத்தைப் பெரிதும் பாதிக்கக்கூடிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது என்று இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கும் டாக்டர் லியூ ஜியென்லின் தெரிவித்தார். இப்பிரச்சினைக்கு ஆளாகும்போது உணர்வுகள் சீராவதும் பிறருடன் தொடர்புகொள்ளத் தேவையான திறன்கள் மேம்படுவதும் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஐ-ஸ்டேர் (i-STAIR) என்றழைக்கப்படும் இந்த மாற்றப்பட்டுள்ள சிகிச்சை முறை எட்டு மாத காலத்தில் தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு நோயாளிக்கும் வழங்கப்படும். ஒவ்வோர் அமர்வும் ஒரு மணிநேரம் நீடிக்கும். மெய்நிகரில் இந்த சிகிச்சை வழங்கப்படும்.
இவ்வாண்டு நவம்பர் மாதம் தொடங்கி 2028ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான மூவாண்டு காலத்துக்கு இந்த ஆய்வு நடைபெறும்.

