அமராவதி போன்ற அறிவார்ந்த நகரங்கள் சார்ந்த திட்டங்களுக்கு அரசியல் நிலைத்தன்மை முக்கியம் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர்-இந்திய வட்டமேசைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 26) பேசிய அவர், அமராவதி திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டத்தின்போது எழவில்லை என அதுகுறித்து கேட்டபோது பதிலளித்தார்.
இருந்தபோதும், இத்தகைய கூட்டுத் திட்டங்கள் வெற்றியடைய அரசியல் நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.
“அமராவதி திட்டம் குறித்து எதுவும் நாங்கள் புதிதாகக் கேட்டதில்லை. ஆயினும், எந்த வருங்கால வாய்ப்புகளாக இருந்தாலும் அதன் நிறைகுறைகளை முறையாக ஆராய தயாராக உள்ளோம்,” என்று அமைச்சர் விவியன் தெரிவித்தார்.
2014ல் தொடங்கப்பட்ட சிங்கப்பூர்-அமராவதி திட்டத்தின்படி ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கு உலகத்தரம் வாய்ந்த தலைநகர் உருவாகவிருந்தது.
‘அசண்டாஸ்-சிங்பிரிட்ஜ்’, ‘செம்ப்கார்ப் டெவலப்மண்ட்’ ஆகிய நிறுவனங்களின் துணையுடன் சிங்கப்பூர் தரப்பு, தங்கள் தொழில்நுட்ப, நிர்வாகத் திறன்களை வழங்கவிருந்தது.
திட்டம் தொடங்கப்பட்ட காலகட்டத்தில் ஆந்திர அரசின் அதிகாரம், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடு தலைமையில் இருந்தது. ஆயினும் 2019க்குப் பிறகு ஒய்எஸ்ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி, முதலமைச்சர் பதவிக்கு வந்த பிறகு அத்திட்டம் கைவிடப்பட்டது.
சிங்கப்பூருக்கும் இந்தியாவும் வெவ்வேறு துறைகளில் வேறு பல புதிய கூட்டுறவுக்கான வாய்ப்புகளைத் தேடிவரும் வேளையில், இந்தியா உடனான உறவை வலுப்படுத்த சிங்கப்பூர் கடப்பாடு கொண்டுள்ளதை அமைச்சர் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
“அரசியல் நிலைத்தன்மை தேவை. நம்பகத்தன்மையும் தேவைப்படுகிறது. இவை எந்த அளவுக்கு அதிகபட்சமாக்க முடிகிறதோ பொருளியல் வளர்ச்சியை விரைவுபடுத்த முடியும். பொறுத்திருந்து பார்ப்போம்,” என்று அமைச்சர் விவியன் கூறினார்.
வர்த்தகங்கள் வாய்ப்புகளைக் கைப்பற்ற வேண்டும்
இதற்கிடையே, வட்டமேசைக் கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற இரவு விருந்தில் உரையாற்றிய துணைப் பிரதமர் கான் கிம் யோங், கூட்டத்தின் மூலம் இருநாட்டு வர்த்தகங்களின் உறவு புதுப்பிக்கப்பட்டது மனநிறைவு தருவதாகக் கூறினார்.
“வர்த்தகங்கள் வளர்ந்து செழிப்பதற்கான சூழலை அரசாங்கம் அமைத்துத் தரலாம். ஆனால் அத்தகைய வாய்ப்புகளைக் கையில் எடுத்துக்கொண்டு வர்த்தக, முதலீடுகளைக் கையில் எடுத்துக் கொள்வதற்கு வர்த்தகங்கள் தேவைப்படுகிறது,” என்று திரு கான் கூறினார்.
சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய நிறுவனங்கள் ஆகப் பெரிய நிறுவனங்களாக இடம்பெறுவதாகக் குறிப்பிட்ட திரு கான், பாரதி குழுமம், டிவிஎஸ் மோட்டர்ஸ், ஏசிஎம்இ குழுமம் ஆகியவற்றை உதாரணங்களாகச் சுட்டினார்.
“அதேபோல சிங்கப்பூருக்கும் இந்தியாவில் நீண்டகால செயல்பாடுகள் உள்ளன. உதாரணத்திற்கு கேப்பிட்டாலேண்ட், இவ்வாண்டு தனது 30வது ஆண்டு நிறைவை இந்தியாவில் கொண்டாவுள்ளது. அத்துடன், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், முன்னதாக விஸ்தாராவுடனும் இப்போது டாடா குழுமத்தின் ஏர் இந்தியாவுடனும் பங்காளித்துவத்தில் இணைந்துள்ளது,” என்றும் திரு கான் கூறினார்.

