போர்ச் சூழலில் அரசதந்திர உறவின் அவசியம் குறித்து சிங்கப்பூர், மலேசியப் பிரதமர்கள் வலியுறுத்து

போர்ச் சூழலில் அரசதந்திர உறவின் அவசியம் குறித்து சிங்கப்பூர், மலேசியப் பிரதமர்கள் வலியுறுத்து

2 mins read
8ac8f49d-127d-45c7-a8f2-ae21244754f2
பிரதமர் லாரன்ஸ் வோங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் தொலைபேசி வழி உரையாடினர். - படம்: ஃபேஸ்புக்
Google News Preferred Icon

மத்திய கிழக்குப் போரின்போது எரிசக்தி மீள்திறன் மற்றும் விநியோகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்கான அரசதந்திர முயற்சிகளின் முக்கியத்துவம் குறித்துப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் வலியுறுத்தினர்.

அவ்விரு தலைவர்களும் ஈரானில் நிலவும் நெருக்கடி குறித்துத் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) தொலைபேசிவழி விவாதித்தனர். அந்த உரையாடல் குறித்துப் பிரதமர் வோங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அண்டை நாடுகள் என்ற முறையில், ஈரானில் நிலவும் நெருக்கடி குறித்து விவாதித்தபோது அதற்குத் தீர்வுகாண அரசதந்திர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து தாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

விநியோகத் தொடர் மீள்திறனை வலுப்படுத்த சிங்கப்பூரும் மலேசியாவும் எவ்வாறு இன்னும் அணுக்கமாகப் பணியாற்றலாம் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது என்றார் பிரதமர்.

“இதுபோன்ற தருணங்களில் சிங்கப்பூர், மலேசியா போன்ற அண்டை நாடுகள் தொடர்ந்து ஒன்றுக்கு ஒன்று ஆதரவாக இருந்து, ஒருங்கிணைந்து செயல்படுவது மிகவும் முக்கியம்,” என்று திரு வோங் தமது பதிவில் தெரிவித்துள்ளார்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவிக்கையில், மத்திய கிழக்கில் நடப்பில் இருக்கும் தற்காலிகப் போர் நிறுத்தத்தைத் தாங்கள் இருவரும் வரவேற்றதாகவும் அந்த விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு ஏற்படவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையை எளிதாக நடத்த பாகிஸ்தான் அளித்து வரும் பங்களிப்பு உள்ளிட்ட தற்போதைய அரசதந்திர முயற்சிகளை மலேசியா ஆதரிப்பதாக அவர் கூறினார்.

மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுவதாகவும் திரு அன்வார் கூறினார்.

ஆசியான் மின் கட்டமைப்பு மூலம் வட்டார ஒத்துழைப்பை விரைவுபடுத்தும் அதேவேளை, மின் கட்டமைப்பின் மீள்திறனை வலுப்படுத்துவதிலும் விநியோகச் சிரமங்களை நிர்வகிப்பதிலும் இரு நாடுகளும் கவனம் செலுத்தும் என்றும் மலேசியப் பிரதமர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி இறுதி நாளில் ஈரான் மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் சிலரை இலக்கு வைத்துக் கொன்றன.

இது, வளைகுடா வட்டாரம் முழுவதும் ஈரான் பதிலடி கொடுக்கும் நிலைக்கு இட்டுச்சென்றது.

அதன் ஒரு பகுதியாக, ‘ஹோர்முஸ் நீரிணையை’ ஈரானிய ராணுவம் மூடியது. உலகின் எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு அந்த நீரிணை வழியாகத்தான் கொண்டு செல்லப்படுகிறது.

அந்த வழித்தடம் மூடப்பட்டதால், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், இரு நாடுகளின் பிரதமர்களும் மார்ச் 25ஆம் தேதி மத்திய கிழக்கு நிலவரங்கள் குறித்து கலந்துரையாடினர்.

எண்ணெய் விநியோகம் மற்றும் பொருளியல் மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ள சூழலில், வட்டார நிலைத்தன்மையைப் பாதுகாக்க அப்போது அந்த இரு தலைவர்களும் உறுதியளித்தனர்.

குறிப்புச் சொற்கள்
லாரன்ஸ் வோங்அன்வார் இப்ராகிம்மத்திய கிழக்கு