ஆர்ச்சர்ட் சாலையில் அமைந்திருக்கும் பிளாசா சிங்கப்பூரா கடைத்தொகுதி, அதனுடன் இணைந்துள்ள ‘த ஏட்ரியம்@ஆர்ச்சர்ட்’ சில்லறை வர்த்தகப் பகுதி ஆகியவற்றின் மேம்பாட்டுக்காக 160 மில்லியன் வெள்ளியை கேப்பிட்டலேண்ட் ஒருங்கிணைந்த வர்த்தக அறநிறுவனம் (சிஐசிடி) முதலீடு செய்ய உள்ளது.
மேம்பாட்டுப் பணிகளை இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கி, 2028ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை அந்த அறநிறுவனம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) வெளியிட்ட தனது முதலாம் காலாண்டு வர்த்தக நிலவர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு, உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுப்பயணிகளைக் கவரும் வகையிலான பொலிவு ஆகியன மூலம் பிளாசா சிங்கப்பூரா கடைத்தொகுதியின் தரத்தை உயர்த்துவதே இந்த மறுசீரமைப்பின் நோக்கம் என்று அது கூறியது.
கடைத்தொகுதிக்குள் அமைந்துள்ள இணைப்புப் பாலங்கள், புதிய உணவுக்கூடங்களை மையமாகக் கொண்டு மிதக்கும் தோட்டங்களாக உருமாற்றப்படவுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
நகர மறுசீரமைப்பு ஆணையம் வகுத்துள்ள திட்டங்களுக்கு இணங்க, கடைத்தொகுதியின் எதிரே உள்ள ஆர்ச்சர்ட் சாலைப் பகுதியை பாதசாரிகள் மட்டும் பயன்படுத்தும் வகையில் மாற்றி, இஸ்தானா பூங்காவை விரிவுபடுத்தி, அந்தப் பூங்காவின் அழகை உள்ளரங்கிற்கு விரிவுபடுத்தும் வகையில் மேம்பாடு மேற்கொள்ளப்படும்.
அந்த மேம்பாடு இயற்கைக்கும் சில்லறை வர்த்தகத்திற்கும் இடையிலான ஒரு தடையற்ற இணைப்பை உருவாக்கும் என்றது சிஐசிடி அறநிறுவனம்.
ஆர்ச்சர்ட் சாலையை நோக்கியுள்ள கடைத்தொகுதியின் நுழைவாயில், பசுமையான சூழலுக்கு மத்தியில் நாள் முழுவதும் இயங்கும் உணவகங்களுடன் புதுப்பிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
அதேவேளை, ஹேண்டி சாலையில் உள்ள கூரையிடப்பட்ட வாகன நிறுத்துமிடத்தில் ஒரு புதிய நவீன முகப்பு அமைக்கப்படும்.
பிளாசா சிங்கப்பூராவின் முக்கியப் பகுதிகள் சில்லறை விற்பனை மற்றும் உணவு உண்ணும் அம்சங்களை உள்ளடக்கிய வகையில் மறுவடிவமைக்கப்படும். அதேபோல, பொதுவான இடங்கள் நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் மெருகூட்டப்படும் என்று சிஐசிடி தெரிவித்துள்ளது.

