ஆர்ச்சர்ட் ரோட்டில் நடைபாதைக் கடைகள் அமைக்கத் திட்டம்

குறைந்த விலையில் புதிய தரமான பொருள்களை அறிமுகப்படுத்த வாய்ப்பு

ஆர்ச்சர்ட் ரோட்டில் நடைபாதைக் கடைகள் அமைக்கத் திட்டம்

2 mins read
59b49b0b-e293-4f39-80b1-32661e5adc4d
அண்மையில் ஆர்ச்சர்ட் ரோட்டில் அமைக்கப்பட்ட கொக்கக்கோலா பானத்தின் வர்த்தகக் கூடம். - படம்: ஆர்ச்சர்ட் ரோடு வர்த்தகர்கள் சங்கம்

சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஆர்ச்சர்ட் ரோட்டை மேம்படுத்தும் விரிவான திட்டத்தின் அங்கமாகப் பொருள்கள் வாங்கும் அனுபவத்தை மெருகூட்டப் புதிய வாய்ப்புகள் இவ்வாண்டு இறுதிக்குள் வழங்கப்பட உள்ளது.

செந்தோசாவில் உள்ள ரிசார்ட்ஸ் வோர்ல்ட் மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (மே 8) நடைபெற்ற 2026ஆம் ஆண்டின் பயணத்துறை மாநாட்டில் பேசிய வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் கிரேஸ் ஃபூ இதனைத் தெரிவித்தார்.

பல வணிகச் சின்னங்களைச் சுழற்சி முறையில் ஆர்ச்சர்ட் ரோட்டில் அறிமுகப்படுத்துவது திட்டத்தின் இலக்கு என்றார் அவர்.

ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள பாதசாரிகள் நடைபாதையில், உடனடி வியாபாரத்துக்குப் பயன்படுத்தக்கூடிய இடங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

மக்களுக்குப் பல புதிய பொருள்களையும் வணிகச் சின்னங்களையும் அறிமுகப்படுத்த விரும்பும் வணிகங்களுக்கு அங்கு வாய்ப்பு வழங்கப்படும். உள்ளூர் தயாரிப்புகளுடன். புதிய தரமான பொருள்களை விற்பனை செய்வதற்கு இது சிறந்த வழியாக அமையும்.

அங்கு தற்காலிகக் கடைகளை அமைக்கும் சாத்தியமும் உண்டு. சந்தைக்குப் புதிய பொருள்களைக் குறைந்த செலவில் சோதனை முறையில் அங்கு விற்பனை செய்த அகு உதவும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

2019ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற தற்காலிகக் கடைகள் ஆர்ச்சர்ட் ரோட்டில் அவ்வப்போது அமைக்கப்பட்டாலும் அவற்றை அவர்கள் பிறகு அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. ஆகவே பல நவீன வசதிகளுடன் அதுபோன்ற வணிகக் கூடங்களை மேம்படுத்தி அங்கேயே நிரந்தரமாக்கப் புதிய திட்டம் விழைகிறது.

விஸ்மா அட்ரியா கடைத்தொகுதிக்கும் நீ ஆன் சிட்டி கடைத்தொகுதிக்கும் இடையே உள்ள பாதசாரி நடைபாதையில் மூன்று தற்காலிக வணிகக் கூடங்களை வடிவமைத்து, நிர்வகிக்க சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் ஒப்பந்தப்புள்ளிகளுக்கு இந்த மாதம் அழைப்பு விடுக்கவிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்