இந்த ஆண்டு புதிதாக 1,000க்கும் அதிகமான ஆசிரியர்களை வேலைக்கு எடுக்கவுள்ளதாகக் கல்வியமைச்சு கூறியிருந்தது. தற்போது அந்தப் பணி சீராக நடந்து வருவதாக அது தெரிவித்துள்ளது.
ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பம் செய்தவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் பணியிடைக்கால தொழில் மாற்றத்தைச் செய்தவர்கள் (mid-career).
கடந்த மூன்று ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் அதிகரித்து வருவதாகக் கல்வியமைச்சு தெரிவித்தது. இருப்பினும் எத்தனைப்பேரை அது வேலைக்கு எடுத்தது என்பது குறித்த தரவுகளை அமைச்சு வழங்கவில்லை.
கடந்த ஜூலை மாதம் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, “சிங்கப்பூரில் இனி வரும் ஆண்டுகளில் புதிதாக ஆண்டுக்கு 1,000க்கும் அதிகமான ஆசிரியர்களைப் பணியமர்த்துவோம், இதற்குமுன் அது 700ஆக இருந்தது,” என்று கூறியிருந்தார்.
தரவுகள்படி 2024ஆம் ஆண்டு 29,605 ஆசிரியர்கள் பணியில் இருந்தனர். 2023ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 30,396ஆக இருந்தது.
“ஆசிரியர்களைப் பணிக்கு எடுக்கும் நடவடிக்கை சற்று சவாலானது. சிறப்பாகச் செயல்படக்கூடியவர்களை மட்டுமே தேர்வு செய்கிறோம்,” என்று கல்வி அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
ஆசிரியர் பணிக்காக விண்ணப்பம் செய்தவர்கள் தகுதியைப் பூர்த்தி செய்திருந்தால் அவர்களை நான்கு வாரங்களுக்குள் அதிகாரிகள் தொடர்புகொள்வார்கள். அதன் பின்னர் அவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
ஆசிரியர் பணி அனுபவம் இல்லாதவர்கள், பாட விளக்கக்காட்சி நடத்த வேண்டும்.
நேர்காணல்களை வெற்றிகரமாகச் செய்பவர்களுக்கு இரண்டு முதல் ஐந்து மாதங்களுக்குள் வேலைக்கான உறுதிக் கடிதம் அனுப்பப்படும். விண்ணப்பம் செய்தவருக்குப் போதிய திறமைகள் உள்ளதா என்பதை ஆராய அந்தக் கால அவகாசம் தேவைப்படுவதாக அமைச்சு கூறியது.
கிட்டத்தட்ட 7 விழுக்காட்டினர், ஆசிரியர் வேலைக்கான நேர்காணல்களை வெற்றிகரமாக முடித்தபிறகு தங்களுடைய விண்ணப்பங்களைத் திரும்பப் பெற்றுக்கொள்கின்றனர்.

