மானியத்துக்காக ‘டபிள்யுஎஸ்ஜி’ பங்காளி அமைப்பை ஏமாற்ற திட்டம்: மாதுக்குச் சிறை

மானியத்துக்காக ‘டபிள்யுஎஸ்ஜி’ பங்காளி அமைப்பை ஏமாற்ற திட்டம்: மாதுக்குச் சிறை

1 mins read
f432736c-d67b-4513-ad86-84c79a394296
குற்றவாளியான சியூ சுய் ‌ஷியென். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தான் வேலை செய்துகொண்டிருந்த நிறுவனத்தில் முதலாளியின் உத்தரவுக்கு இணங்க சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் (டபிள்யுஎஸ்ஜி) பங்காளி அமைப்பை ஏமாற்றப் போலி ஆவணங்களைத் தயார்செய்த விற்பனை இயக்குநருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டபிள்யுஎஸ்ஜி, மனிதவள அமைச்சின்கீழ் இயங்கும் அரசாங்க அமைப்பாகும். அதன் பங்காளி அமைப்பான ‘இ2ஐ’ எனப்படும் வேலை நியமன, வேலைத் தகுதிக் கழகத்தை ஏமாற்றி, ஹாங்குக் கிட்சன் எனும் உணவுப் பொருள் நிறுவனத்துக்கு 14,400 வெள்ளி மதிப்பிலான மானியங்களைப் பெற்றுத்தர சியூ சுய் ‌ஷியென், ஹேடன் ஹீ லிக்-காய் என்பவருக்குத் துணைபோனதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டது.

அந்தத் தொகை இப்போது மீட்கப்பட்டுவிட்டதாக அரசாங்கத் துணை வழக்கறிஞர் தியோங் லின் ஹான் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றவாளியான 53 வயது சியூவுக்கு செவ்வாய்க்கிழமை ஐந்து மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 8,400 வெள்ளி மதிப்பிலான மோசடி, போலி ஆவணங்களைத் தயார்படுத்துவது ஆகியவை தொடர்பில் தன் மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும் 6,000 வெள்ளி தொடர்பான குற்றச்சாட்டும் தீர்ப்பளிக்கும்போது கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

குற்றங்கள் நிகழ்ந்தபோது ஹீ, 45, ஹாங்குக் கிட்சனின் ஒரே இயக்குநராகவும் பங்குதாரராகவும் பொறுப்பு வகித்தார். அவரின் வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ளது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்குற்றம்குற்றச்சாட்டுசிறைஏமாற்று