தீவு விரைவுச்சாலையில் பலவாகன விபத்து; மருத்துவமனையில் 14 பேர்

தீவு விரைவுச்சாலையில் பலவாகன விபத்து; மருத்துவமனையில் 14 பேர்

2 mins read
f0bb13ca-340a-463b-8a35-3c27af2c8997
விபத்தில் கடுமையாகச் சேதமடைந்த சிவப்பு நிறக் கார் (நடுவில்). - படம்: KLYNZZ_TXYY/ இன்ஸ்டகிராம்
Google News Preferred Icon

தீவு விரைவுச்சாலையில் இரண்டு கார்கள், இரண்டு லாரிகள், ஒரு ‘டிப்பர்’ லாரி ஆகிய வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிய விபத்தில் 14 பேர் காயமடைந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சனிக்கிழமை (மே 30) மாலை 6.30 மணியளவில் துவாசை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் ஜூரோங் டவுன் ஹால் சாலை வெளிவாயிலுக்கு முன்னதாக நடந்த இந்த விபத்து பற்றிய தகவல் தங்களுக்குக் கிடைத்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த 14 பேர், 23 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனக் காவல்துறை கூறியது.

ஆறு பேர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கும், மேலும் எட்டுப் பேர் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாகக் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

மேலும் ஐவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்ததாகக் கூறப்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்றபோது, ஓட்டுநர் இருக்கையில் சிக்கியிருந்த ஒருவரைக் குடிமைத் தற்காப்புப் படை ஹைட்ராலிக் மீட்புக் கருவிகளைப் பயன்படுத்தி மீட்டது.

‘டிப்பர்’ லாரியின் 39 வயது ஓட்டுநர் ஒருவர் விசாரணைகளுக்கு உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மூன்று தடங்களைக் கொண்ட விரைவுச்சாலையின் நடுத் தடத்தில், ‘டிப்பர்’ லாரி ஒன்று அபாய விளக்குகள் ஒளிர விடப்பட்ட நிலையில் இருந்ததை இன்ஸ்டாகிராம் காணொளி ஒன்றில் காணமுடிகிறது.

லாரிக்கு முன்னால் இருந்த சிவப்பு நிறக் கார் ஒன்றின் பின்பகுதி நொறுங்கிய நிலையில் காணப்படுகிறது.

அத்துடன், ஒன்றோடொன்று மோதிக்கொண்ட இரண்டு லாரிகள் சற்றுத் தள்ளி நிற்பதையும் காணமுடிகிறது.

விபத்து தொடர்பான காவல்துறை விசாரணை தொடர்கிறது.

போக்குவரத்துக் காவல்துறை பிப்ரவரி மாதம் வெளியிட்ட வருடாந்தரப் புள்ளிவிவரங்களின்படி, சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 2024ல் 9,342லிருந்து 2025ல் 9,955 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, காயங்களை ஏற்படுத்திய போக்குவரத்து விபத்துகளின் எண்ணிக்கையும் 2024ல் 7,053லிருந்து 2025ல் 7,560 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தீவு விரைவுச்சாலையில் ஆறு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்து ஒன்றில் எட்டு வயதுச் சிறுவன் உட்பட இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சனிக்கிழமை காலை 8.20 மணியளவில் துவாசை நோக்கிச் செல்லும் அந்தச் சாலையில் ஐந்து கார்கள், ஒரு மோட்டார்சைக்கிள் ஆகியவை சம்பந்தப்பட்ட விபத்து குறித்துத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையும் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.

41 வயது மோட்டார்சைக்கிளோட்டியும், காரில் பயணம் செய்த எட்டு வயதுச் சிறுவனும் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் காவல்துறை கூறியது.

குறிப்புச் சொற்கள்
தீவு விரைவுச் சாலைவிபத்துகாயம்மருத்துவமனை