சுவா சூ காங்கில் இம்மாதம் 19ஆம் தேதி, செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட நாய் ஒன்று புளோக் ஒன்றிலிருந்து விழுந்து மாண்டதாக நம்பப்படும் சம்பவம் குறித்து தேசியப் பூங்கா வாரியம் விசாரித்துவருவதாகத் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் செல்லப்பிராணியின் உரிமையாளருடன் தொடர்பில் இருப்பதாகத் தேசியப் பூங்கா வாரியத்தின் அமலாக்க, விசாரணைப் பிரிவு இயக்குநர் ஜெசிக்கா குவோக் திங்கட்கிழமை (பிப்ரவரி 23) கூறினார்.
சிங்கப்பூரின் விலங்குவதைத் தடுப்புச் சங்கத்தின் மூலம் (எஸ்பிசிஏ) சம்பவம் குறித்து தேசியப் பூங்கா வாரியம் அறியவந்ததாகக் குறிப்பிட்டது.
உயரத்திலிருந்து வெள்ளை நாய் ஒன்று கீழே விழுந்தது குறித்து இம்மாதம் 19ஆம் தேதி தகவல் கிடைத்ததாக எஸ்பிசிஏ கூறியது. மீட்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வரும் முன் நாய் இறந்துவிட்டதாக அது சொன்னது.
சம்பவம் சுவா சூ காங் அவென்யூ 3ல் உள்ள புளோக் 281ல் நேர்ந்ததாக சமூக ஊடகத்தில் தெரிகிறது.
பிப்ரவரி 20ஆம் தேதி உரிமையாளரின் வீட்டிற்குச் சென்றபோது நாயின் இறப்பால் பாதிக்கப்பட்டிருப்பதைக் காண முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீட்டில் உள்ளோர் இரவு உணவைத் தயாரிக்கச் சென்றபோது நாயை யாரும் கவனிக்காமல் விட்டுள்ளனர் என்றும் வீட்டின் சன்னல் அப்போது திறந்திருந்தது என்றும் அவர்கள் கூறினர்.
நாய் 13வது மாடியிலிருந்து விழுந்ததையும் எஸ்பிசிஏ குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
வேறொரு நாயை வளர்க்கத் திட்டமிட்டிருந்தால் பாதுகாப்புக்காக சன்னலில் தடுப்புக் கம்பிகளைப் பொருத்தும்படி உரிமையாளருக்கு எஸ்பிசிஏ அறிவுரை வழங்கியது.

