டிக்டாக் காணொளிகள் மூலம் பொய்யான செய்தி பரப்பியவர் மீது பொஃப்மா சட்டத்தின்கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமது டிக்டாக் காணொளிகளில் பொய்ச் செய்தி கூறியதற்கும் இனங்களுக்கு இடையே பகையுணர்வைத் தூண்டியதற்கும் எதிராக 59 வயது ஆடவர் மீது புதன்கிழமையன்று (மார்ச் 11) குற்றம் சாட்டப்பட்டது.
ஜெய் இஷாக் ராஜு மீது மொத்தம் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பொய்ச் செய்தி பரப்பியது தொடர்பாக மூன்று குற்றச்சாட்டுகளையும் இன ரீதியாகப் பகையுணர்வைத் தூண்ட முயன்றதற்கான ஒரு குற்றச்சாட்டையும் அவர் எதிர்நோக்குகிறார்.
அவதூறு பரப்பியதாக அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை அரசாங்கத்தால் கண்காணிக்க முடியும் என்றும் அதன் அடிப்படையில் அவர்களைத் தண்டிக்க முடியும் என்றும் கூறி 2023ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதியன்று ராஜு டிக்டாக் காணொளி ஒன்றைப் பதிவேற்றம் செய்தார்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக கடனைத் திருப்பிச் செலுத்த மத்திய சேமநிதிப் பணத்தைப் பயன்படுத்திய நடுத்தர அல்லது குறைந்த வருமானம் கொண்ட எவரும் தங்களது ஓய்வூதியத் தொகையை எட்டவில்லை எனக் கூறி 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று இன்னொரு காணொளியை அவர் வெளியிட்டார்.
மூத்த அமைச்சர் லீ சியன் லூங் மீது அவதூறு பரப்பும் வகையில் 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதியன்று ராஜு டிக்டாக் காணொளி ஒன்றை பதிவேற்றம் செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
தலைமைச் சட்ட அதிகாரியாக திரு லூசியன் வோங்கைத் திரு லீ முன்மொழிந்தது வாரிசு அரசியல் மற்றும் நலன்கள் அடிப்படையிலான முரண்பாடு என்று அந்தக் காணொளியில் ராஜு குறிப்பிட்டிருந்தார்.
2023ஆம் ஆண்டில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் தொடர்பாக, 2024ஆம் ஆண்டில் காவல்துறை மற்றும் பொஃப்மா அலுவலகத்தால் ராஜுவுக்கு 24 மாத நிபந்தனையுடனான எச்சரிக்கைகள் வழங்கப்பட்டன. அந்த காலகட்டத்தில் அவர் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடக்கூடாது என்பது நிபந்தனை.
இருப்பினும், 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதியன்று அவர் மற்றொரு காணொளியை வெளியிட்டு அந்த நிபந்தனையை மீறினார்.
சீனாவிலிருந்து வருபவர்களை ஈர்க்கவும் அவர்களைத் தலைமைப் பொறுப்புகளுக்குத் தயார் செய்யவும் அரசாங்கம் பணத்தையும் வளங்களையும் வழங்குவதாகத் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹாங் டாட் அறிவித்ததாக ராஜு கூறினார்.
சீன இனத்தவர்களை மட்டுமே தலைவர்களாக மாற்ற அரசாங்கம் முனைவதாகக் குற்றம் சாட்டினார்.
இதன் காரணமாக, பழைய எச்சரிக்கைகள் ரத்து செய்யப்பட்டு அவர் தற்போது குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். இந்த வழக்கு மீண்டும் ஏப்ரல் 8ஆம் தேதியன்று விசாரணைக்கு வரும்.
தவறான தகவல்களைப் பரப்பியதற்காக $50,000 வரை அபராதம், ஐந்து ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இனங்களுக்கு இடையே பகையுணர்வைத் தூண்டிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அவதூறு குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

