உரிமம் பெறாத உடற்பிடிப்புச் சேவை நிலையம் இயங்க அனுமதி; கடை உரிமையாளர் மீது குற்றச்சாட்டு

உரிமம் பெறாத உடற்பிடிப்புச் சேவை நிலையம் இயங்க அனுமதி; கடை உரிமையாளர் மீது குற்றச்சாட்டு

1 mins read
00a05a2c-ff03-4e6c-b997-13026f5c70cd
குற்றம் நிரூபிக்கப்பட்டால், கடை உரிமையாளருக்கு $10,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உரிமம் பெறாத உடற்பிடிப்புச் சேவை நிலையத்துக்கு தமது கடையை வாடகைக்கு விட்டதாக கங்கா ஜமுனா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அந்தக் கடை புளோக் 767 அப்பர் சிராங்கூன் சாலையில் உள்ளது.

அந்த இடத்தை ‘யா ஜி மெய் ஹெல்த் பியூட்டி ஸ்பா’ பயன்படுத்த கடையின் உரிமையாளரான கங்கா ஜமுனா எகெல்ட்ரானிக்ஸ் நிறுவனம் அனுமதித்ததாகக் கூறப்படுகிறது.

2025 அக்டோபர் 30ஆம் தேதியன்று காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தியபோது இந்தச் சட்டவிரோதச் செயல் கண்டறியப்பட்டதாக செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமம் பெறாத அந்த உடற்பிடிப்புச் சேவை நிலையத்தை நடத்தியவர் தம் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு $10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

கடை உரிமையாளர்கள் தங்கள் வாடகைதாரர்கள் குறித்தும் அவர்கள் வாடகைக்கு எடுத்த இடத்தை எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்தும் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

எந்தவொரு சட்டவிரோதச் செயல்களுக்கும் தெரிந்தே தங்கள் இடத்தைப் பயன்படுத்த அனுமதிக்கும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

நீதிமன்றப் பதிவுகளின்படி, வீட்டு உரிமையாளர் மே மாதம் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், கடை உரிமையாளருக்கு $10,000 வரை அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்