நாடாளுமன்றம்: வேறு இருக்கைக்கு மாற்றப்பட்ட பிரித்தம் சிங்

நாடாளுமன்றம்: வேறு இருக்கைக்கு மாற்றப்பட்ட பிரித்தம் சிங்

2 mins read
94028900-b690-44da-8847-615294dbbcee
எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பாட்டாளிக் கட்சியின் திரு பிரித்தம் சிங், நாடாளுமன்றத்தில் இனி பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு எதிரில் அமரவைக்கப்படமாட்டார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
Google News Preferred Icon

பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங், எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து நாடாளுமன்றத்தில் அவருக்கான இருக்கை மாற்றப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பை வகித்த திரு சிங், நாடாளுமன்ற அமர்வுகளின்போது பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு எதிரில் அமர்வது வழக்கம். இனி அவர் அந்த இடத்தில் அமர வைக்கப்பட மாட்டார்.

நாடாளுமன்றம் அதன் இணையத்தளத்தில் வெளியிட்ட புதிய இருக்கை நியமனங்களின்படி திரு சிங் அமர்ந்திருந்த இடத்தில் இனி நாடாளுமன்றத் துணை நாயகர் கிறிஸ்தபர் டி சூசா அமர்வார்.

திரு டி சூசாவின் அருகே மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சியே யாவ் சுவேனும் திரு விக்ரம் நாயரும் அமர்த்தப்படுவார்கள். அவர்கள் இருவரும் அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவர்கள்.

திரு சிங், துணை நாயகராகவும் பொறுப்பு வகிக்கும் திரு சியேவின் பக்கத்தில் அமர்வார். அதாவது திரு சிங், சுகாதார அமைச்சரும் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஓங் யீ காங்கிற்கு எதிரில் அமர்வார்.

செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 3) நாடாளுமன்ற அமர்வுக்குமுன் காலை 10.30 மணியளவில் எந்த உறுப்பினர் எங்கு அமர்வார் என்பதைக் காட்டும் வரைபடத்தை நாடாளுமன்றம் வெளியிட்டது.

எந்த உறுப்பினர் எங்கு அமர்வர் என்பதைக் காட்டும் வரைப்படத்தை நாடாளுமன்றம் வெளியிட்டது.
எந்த உறுப்பினர் எங்கு அமர்வர் என்பதைக் காட்டும் வரைப்படத்தை நாடாளுமன்றம் வெளியிட்டது. - படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பிற்பகல்வாக்கில் நாடாளுமன்றம் கூடியபோது மன்ற நாயகர் சியா கியன் பெங், பிரதமர் லாரன்ஸ் வோங்கிடமிருந்து வந்த கடிதம் ஒன்றை வாசித்தார்.

அதில் ஜனவரி 15ஆம் தேதியிலிருந்து பாட்டாளிக் கட்சியின் திரு பிரித்தம் சிங் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் நீடிக்கமாட்டார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

திரு சிங், எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புக்குத் தகுதியானவர் அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் வாக்களித்ததை முன்னிட்டு மறுநாள், அதாவது ஜனவரி 15ஆம் தேதி பிரதமர் வோங் திரு சிங்கை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கினார்.

2021ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பொய் சொன்னதாக முன்னாள் பாட்டாளிக் கட்சி உறுப்பினர் ரயீசா கான் வழக்குத் தொடர்பில் திரு பிரித்தம் குற்றவாளி என்று நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.

இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட திரு சிங்கிற்கு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் $7,000 அபராதத்தை நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பரில் விதித்தது.

குறிப்புச் சொற்கள்
பிரித்தம் சிங்நாடாளுமன்றம்இருக்கைகள்