மக்கள் செயல் கட்சியின் கோட்டையான தஞ்சோங் பகார் குழுத்தொகுதியை அக்கட்சி 81.03% வாக்குகளுடன் மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது. 1988ஆம் ஆண்டு இந்தத் தொகுதி உருவாக்கப்பட்டது முதல் இதுவே அதிக வாக்குகளுடன் மசெக அணி வென்றுள்ளது.
காலஞ்சென்ற திரு லீ குவான் இயூவால் வழிநடத்தப்பட்ட இக்குழுத்தொகுதியை இம்முறை தலைமையேற்று நடத்தினார் கல்வி அமைச்சர் சான் சுன் சிங்.
தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் பல ஆண்டுகளாக சேவையாற்றியுள்ள பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, இந்தத் தேர்தலில் வேறு தொகுதிக்கு மாறினார்.
அதேபோல பலரும் எதிர்பார்க்காத வகையில், கணிசமான நேரம் பொங்கோலில் காணப்பட்டிருந்த புதுமுகம் ஃபூ செசியாங், தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
எனினும் திரு சான், இம்முறை ஆல்வின் டான், ஜோன் பெரேரா, ஃபூ செசியாங், ரேச்சல் ஓங் உள்ளிட்டோருடன் இத்தொகுதியில் தேர்தலை சந்தித்தார்.
இதற்கிடையே மே 3ஆம் தேதி நள்ளிரவு நிறைவடைந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் 98,152 வாக்குகளை பெற்று மசெக ஐவர் அணி வெற்றிபெற்றது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே முன்னணி வகித்தது மசெக அணி.
அந்தக் கட்சியை எதிர்த்து போட்டியிட்ட சீர்திருத்த மக்கள் கூட்டணி 22,971 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தது.
தொடர்புடைய செய்திகள்
சீமகூ சார்பில் கியாவ் ஜூன் சாய், ரிக்சன், ஹான் ஹுய் ஹுய், நடராஜன் செல்வமணி, பிரபு ராமச்சந்திரன், சோ லியான் சாய் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதற்கிடையே இவ்வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திரு சான், மசெக தேர்தலின் முடிவுகளை கருத்தில் கொண்டு போட்டியிடவில்லை; குடியிருப்பாளர்களின் நலனை முதன்மையாகக் கொண்டே தேர்தலை சந்தித்தது என்று தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“குடியிருப்பாளர்களை நாம் பார்த்துக்கொண்டால், அவர்கள் நம்மை பார்த்துக்கொள்வார்கள்,” என்றார் திரு சான்.
வெற்றிபெற்ற மறுநாள் தம் கட்சி வெற்றி பேரணி செல்லப்போவதில்லை என்றும் மாறாகக் குடியிருப்பாளர்களை சந்தித்து அவர்கள் நல்வாழ்விற்காக உடனடி பணியில் இறங்கப்போவதாகவும் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில், தஞ்சோங் பகார் குழுத்தொகுதி வேட்பாளர்கள், ராடின் மாஸ், குவீன்ஸ்டவுன் தனித்தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் பங்கேற்றனர்.

