மசெக புதுமுகங்கள்: நீ சூனில் காணப்பட்ட முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்

2 mins read
a7fc2d6f-93dc-42cb-94b3-12a6f6251f02
நீ சூன் குழுத்தொகுதியில் உள்துறை அமைச்சர் கா.சண்முகத்துக்கு (வலது) அருகே முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சையது ஹருன் அல்ஹப்‌ஷி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரான சையது ஹருன் அல்ஹப்‌ஷி நீ சூன் குழுத்தொகுதியில் வியாழக்கிழமை (மார்ச் 27) காணப்பட்டார்.

நியமன நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு முதன்முறையாக அவர் பொது நிகழ்வு ஒன்றில் காணப்பட்டார். 39 வயது மனநல மருத்துவரான டாக்டர் சையது ஹருன், உள்துறை அமைச்சர் கா. சண்முகம் உட்பட நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் காணப்பட்டார்.

அவர்கள் முன்னாள் நார்த்வியூ உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றிருந்தனர். அப்பள்ளி தற்போது தற்காலிகத் தொழுகை இடமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டாருல் மாக்முர் பள்ளிவாசலுக்கான புதுப்பிப்புப் பணிகள் நடந்துவருவதால் முன்னாள் நார்த்வியூ உயர்நிலைப் பள்ளி வளாகம் தற்காலிகத் தொழுகை இடமாகப் பயன்படுத்தப்படுகிறது.

தடாக்டர் சையது ஹருனைத் தவிர, அறிவுசார் சொத்து வழக்கறிஞர் டெரின் சிம், 40, திருவாட்டி லீ ஹுய் யிங், 36, திரு ஜாக்சன் லாம், 40 ஆகியோரும் வியாழக்கிழமையன்று நீ சூனில் காணப்பட்ட மக்கள் செயல் கட்சிப் (மசெக) புதுமுகங்களாவர். திரு ஜாக்சன் லாம், கடந்த பிப்ரவரி மாதம் மசெகவின் ஹவ்காங் கிளைத் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார்.

பிப்ரவரி 14ஆம் தேதியன்று டாக்டர் சையது ஹருன், வழக்கறிஞர் ராஜ் ஜோஷுவா தாமஸ் இருவரும் நியமன நாடாளுமன்றப் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டனர். நியமன நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தவணைக் காலம் நிறைவடைதற்கு முன்பு பதவி விலகியது இதுவே முதல் முறையாகும்.

அவ்விருவரும் 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றனர். தங்களின் ஈரரை ஆண்டு தவணைக் காலத்தில் அவர்களுக்குக் கிட்டத்தட்ட ஓராண்டு எஞ்சியிருந்தது.

பதவி விலகியதைத் தொடர்ந்து இருவரும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடும் என்று பேசப்பட்டது. சிங்கப்பூரின் அடுத்த பொதுத் தேர்தல் இவ்வாண்டு நவம்பர் மாதத்துக்குள் நடத்தப்படவேண்டும்.

‘ஸ்டார்ஃபி‌ஷ் கிளினிக் ஆஃப் சைக்கயட்ரி & மென்டல் வெல்னஸ்’ (Starfish Clinic of Psychiatry & Mental Wellness) மருந்தகத்தில் மனநல மருத்தவராகவும் மருத்துவ இயக்குநராகவும் பணியாற்றும் டாக்டர் சையது ஹருன், ஃபேஸ்புக்கில் தமது பதவி விலகல் கடிதத்தை வெளியிட்டிருந்தார். அரசியல் சேவையில் இருக்கக்கூடிய வாய்ப்புகளை ஆராய தாம் அவ்வாறு செய்வதாக அவர் தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்