வரலாறு காணாத எண்ணிக்கையிலான பக்தர்களின் பங்கேற்புடன் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இவ்வாண்டு 19,000க்கும் அதிகமான பக்தர்கள் பால்குடம் ஏந்தியும், 349 பேர் காவடி சுமந்தும் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்தினர். கடந்த ஆண்டு ஏறத்தாழ 16,000 பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.
இது, தைப்பூசத் திருவிழா வரலாற்றில் பதிவான ஆக அதிக எண்ணிக்கை என்று இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை (ஜனவரி 31) இரவு ஏறத்தாழ 11.20 மணிக்குப் பால்குடங்கள் சிராங்கூன் ரோடு ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலை நோக்கி வரிசையாகப் புறப்பட்டன. பின்னர், அலகுக் காவடிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.15 மணிக்குப் புறப்பட்டன.
காவடி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 1) இரவு வரை தொடர்ந்தது.
கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் பெருமாள் கோயிலுக்கு வருகைதந்து, பக்தர்களுடன் இணைந்து திருவிழாவில் பங்கேற்றார்.
தம் துணைவியாருடன் பால்குடம் ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்ற அவர், வழியில் இருந்த பக்தர்களுடனும் தொண்டூழியர்களுடனும் கலந்துரையாடினார்; பின்னர் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலை அடைந்து அங்கு வழிபட்டார்.
“பக்தர்களுடன் இணைந்து நானும் நடந்து வந்ததால் அவர்களின் அனுபவத்தை என்னால் உணர முடிந்தது. போக்குவரத்துச் சந்திப்புகள் போன்ற சில இடங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டாலும், ஒட்டுமொத்தமாக இவ்வாண்டு ஏற்பாடுகள் மிகவும் சீராக இருந்தன,” என்று திரு தினேஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டைவிட பக்தர்களின் எண்ணிக்கை 20 முதல் 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வரிசை மேலாண்மை இம்முறை சிறப்பாகத் திட்டமிடப்பட்டிருந்ததாகக் கூறினார்.
“சென்ற ஆண்டு நீண்ட தொலைவிற்கு வரிசைகள் இருந்தன. ஆனால் இம்முறை, இரண்டு கோயில் நிர்வாகங்களும் ஒருங்கிணைந்து அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் தடையின்றித் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்த வழிவகை செய்துள்ளன,” என்று திரு தினேஷ் விளக்கினார்.
இவ்வாண்டு செய்யப்பட்ட முக்கிய மாற்றங்களில் ஒன்று, தெண்டாயுதபாணி கோயிலில் அமைக்கப்பட்ட கூடுதல் நுழைவு, வெளியேற்றப் பாதைகள்.
இதற்குமுன், பக்தர்கள் முதன்மை வாயில் வழியாக மட்டுமே நுழைய முடிந்தது. ஆனால் இம்முறை பக்கவாட்டு வாயில் ஒன்று திறக்கப்பட்டதால், பால்குடம் ஏந்தி வந்த பக்தர்கள் விரைவாகச் செல்ல முடிந்தது. அதேபோல், வழிபாட்டிற்குப் பிறகு வெளியேறவும் தனி வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தது.
“முதியவர்கள், நீண்ட தொலைவு நடக்க இயலாதவர்களுக்கெனத் தனிப்பாதை அமைக்கப்பட்டதால், அவர்கள் கூட்டத்தில் சிக்காமல் எளிதாகச் செல்ல முடிந்தது,” என்றார் துணையமைச்சர்.
இந்த மாற்றங்கள் இந்து அறக்கட்டளை வாரியம், இரு கோயில் நிர்வாகங்களின் கூட்டு முயற்சியால் சாத்தியமானது என்றும் பக்தர் ஒருவர் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
கூட்டத்தை நிர்வகிப்பதில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகித்ததாக இந்து அறக்கட்டளை வாரியத் தலைமை நிர்வாக அதிகாரி சரோஜினி பத்மநாதன் தெரிவித்தார். வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்ற பிறகு அவர் தைப்பூச விழாவை முன்னின்று நடத்தியது இது முதன்முறை.
“கியூஆர் குறியீடு, நேர வரம்பு முறையைப் பயன்படுத்தி பக்தர்கள் பாதுகாப்பாகவும் சிரமமின்றியும் கோயிலிற்குள் நுழைவதை உறுதிசெய்தோம்,” என்றார் அவர்.
இணையம் வாயிலான முன்பதிவு இடங்கள் முழுமையாக நிரம்பியதைத் தொடர்ந்து, பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க நேரடி முன்பதிவும் கூடுதல் நேர வரம்புகளும் ஜனவரி 30 முதல் ஜனவரி 31 வரை வழங்கப்பட்டன.
“எந்தவொரு பக்தரும் நேர்த்திக்கடன் செலுத்தாமல் திரும்பக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்,” என்று திருவாட்டி சரோஜினி கூறினார்.
நேரடிப் பதிவின்வழி வழங்கப்பட்ட புதிய இடங்கள் அனைத்தும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த நடவடிக்கை பக்தர்களுக்கு நம்பிக்கையூட்டியதாக அவர் குறிப்பிட்டார்.
பக்தர்களிடமிருந்து கிடைத்துள்ள கருத்துகள் ஊக்கமளிப்பதாக உள்ளன என்றும் அவர் சொன்னார்.
“பக்தர்களால் வசதியாக அமர்ந்து, நிம்மதியாக வழிபட முடிந்தது. கூட்ட நெரிசலின்றிப் பால்குடங்களைச் சுமந்து செல்லவும் முடிந்தது. இதுவே இந்த விழாவின் வெற்றிக்கான ஓர் அளவுகோலாகக் கருதுகிறேன்,” என்றார் அவர்.
இவ்வாண்டு அனுபவங்கள், அடுத்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவிற்கு மேலும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ய வழிகாட்டும் என்றும் அவர் கூறினார்.
நாள் முழுவதும் வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களையும் நிலவரத்தையும் தொடர்ந்து கண்காணித்து வந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தமது மகளின் ‘ஏ’ நிலைத் தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சிபெற வேண்டி முதல்முறை பால்குடம் ஏந்தத் தொடங்கியதாகவும் இப்போது மூன்றாவது முறையாகப் பால்குடம் ஏந்துவதாகவும் கூறினார் கங்காதேவி வானு கிருஷ்ணையன், 53. ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணிக்குப் பெருமாள் கோயிலிலிருந்து புறப்பட்ட அவர், இம்முறை கூட்ட நெரிசல் இன்றி விரைவாகச் செல்ல முடிந்ததாகக் கூறினார்.
“முன்பதிவு செய்திருந்த நேரத்திற்குச் சென்றதால், பெருமாள் கோயிலிலிருந்து ஒரு மணி நேரத்தில் தெண்டாயுதபாணி கோயிலைச் சென்றடைய முடிந்தது.
“முன்பெல்லாம் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால் இம்முறை பால்குடத்திற்கும் காவடிக்கும் தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட்டிருந்ததால் எவ்வித இடையூறுமின்றி விரைவாகச் செல்ல முடிந்தது. இறைவனையும் நிதானமாகத் தரிசிக்க முடிந்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.
வேறு சிலர், புதிய ஏற்பாடுகளுக்கு மத்தியிலும் நீண்ட காத்திருப்பு நேரத்தால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டனர். சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் பெருமாள் கோயிலைச் சென்றடைந்த 52 வயது இந்துமதி, நுழைவதற்கே நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாகக் கூறினார்.
மேலும், தண்ணீர்ப் பந்தல்களை அணுகுவதில் சில சிரமங்கள் இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார். “குறிப்பாக பினாங்கு ரோடு பகுதியில் நீண்ட நேரம் காத்திருந்தபோது, தண்ணீர் பெறுவது சற்றுக் கடினமாக இருந்தது,” என்றார் அவர்.
இருப்பினும், எதிர்பாராத அளவு கூட்டம் இருந்தபோதும், கூட்ட நெரிசல் நிர்வாகம் சிறப்பாக இருந்ததாகக் கூறிய அவர், இன்னும் எவ்வளவு தொலைவு நடந்து செல்லவேண்டும் என்பதைக் காட்டும் பெரிய திரைகள் அமைக்கப்பட்டிருந்தது மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகக் கூறினார்.
பால்குடம் ஏந்திய மற்றொரு பக்தரான 24 வயது ஆதிரா ஜோஷி, மாலை 4 மணிக்குச் சென்றபோது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாகத் தெரிவித்தார். பாதையில் நீர் தெளிக்கப்பட்டிருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் என்று குறிப்பிட்ட அவர், மற்ற ஏற்பாடுகள் அனைத்தும் நடைப்பயணத்தைச் சுமுகமாக மேற்கொள்ள உதவியதாகக் கூறினார்.

