முதியோரை மகிழ்வித்த வெளிப்புற தீபாவளிக் கொண்டாட்டம்

முதியோரை மகிழ்வித்த வெளிப்புற தீபாவளிக் கொண்டாட்டம்

2 mins read
cb727e2d-6f7b-4edc-85d8-7352990a5976
சிராங்கூனிலுள்ள சன்லவ் பராமரிப்பு நிலையத்தின் தீபாவளிக் கொண்டாட்டத்தில் மூதாட்டி ஒருவரின் கையில் மருதாணி வரையப்படுகிறது. - படம்: சன்லவ் இல்லம்
Google News Preferred Icon

குடும்பங்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் என்ற வட்டத்தைக் கடந்து சமூக அளவில் நடத்தப்படும் தீபாவளிக் கொண்டாட்டங்களில் ஒருவரையொருவர் முன்பு தெரியாதவர்களும் உறவாடி மகிழ்கின்றனர்.

சன்லவ் பராமரிப்பு இல்லம் நடத்திய சிராங்கூன் துடிப்புடன் மூப்படைதல் நிலையத்தில் (active ageing centre) தீபாவளிக் கொண்டாட்டம் இதற்கான வாய்ப்பைத் தந்தது. 

சனிக்கிழமை பிற்பகல் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 200 பேர் திரண்டிருந்தனர். 

சேலை கட்டுதல், மருதாணி, கைவினைப்பொருள் வனைதல் ஆகிய நடவடிக்கைகள் நிகழ்ச்சியில் இடம்பெற்றன.

2021ல் திறக்கப்பட்ட இந்த நிலையத்தில் முதியோர்க்குச் செறிவூட்டும் உடற்பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்றன. 

செல்ஃபி படங்களை எடுப்பதற்கானக் கூடம் ஒன்றும் இருந்தது. வந்திருந்த அனைவருக்கும் பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது. 

மக்கள் செயல் கட்சியைச் சேர்ந்த ஆர்வலர் டாக்டர் ஏட்ரியன் ஆங், நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.

அடுத்த ஆண்டு தீபாவளிக் கொண்டாட்டங்களை மேலும் பெரிய அளவில் நடத்த விரும்புவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியின் சேலை அழகுராணிகள்
நிகழ்ச்சியின் சேலை அழகுராணிகள் - படம்: சன்லவ் இல்லம்

வெளிப்புற இடத்தில் இந்த நிகழ்ச்சி நடத்துவது முதன்முறை எனக் கூறினார் நிலைய மேலாளர் ஆல்பர்ட் பெரேரா. 

நிகழ்ச்சி மிகவும் நன்றாக இருந்ததாகப் பாராட்டிய 75 வயது ஜி.நாகம்மாள், சன்லவ் நிகழ்ச்சிகளில் கடந்த ஓராண்டாகப் பங்கேற்று இன்புறுவதாகக் கூறினார்.

நிலையத்தில் வாரத்திற்கு ஒருமுறை யோகாசனப் பயிற்சி செய்கிறேன். வெள்ளிக்கிழமைகளில் கேளிக்கைக்காக நண்பர்களுடன் பாடுவேன், சுற்றுலா செல்வேன், என்று அவர் புன்னகையுடன் கூறினார்.

இந்தியர்கள் பெருவாரியாகக் கலந்துகொள்ள அழைப்பு

துடிப்புடன் மூப்படைதல் நிலையங்களுக்குச் சென்று உற்சாகமடையும்படி சன்லவ் இல்ல நிர்வாகி மகாலட்சுமி ரமேஷ் இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த முதியோரிடம் கேட்க விரும்புவதாகக் கூறினார். 

“உங்களுக்குத் தெரிந்தவற்றை நீங்கள் பிறரிடம் பேசிப் பகிரலாம். புதியவற்றை நீங்களும் இத்தகைய நிலையங்களில் கற்றுக்கொள்ளலாம். தனிமையில் இருப்பது போல உணர்வு ஏற்பட்டாலும் இங்கு வாருங்கள்,” என்று திருவாட்டி மகாலட்சுமி கூறினார். 

நண்பர்களாக இணைந்த தொண்டூழியர்கள்
நண்பர்களாக இணைந்த தொண்டூழியர்கள் - படம்: சன்லவ் இல்லம்

இளையர்களுக்கு என்ன செய்யலாம் என்ற யோசனைகளை முன்வைத்து அவர்களுக்குத் திறன் கற்பிக்கும் வாய்ப்புகளையும் பெறலாம் என்றும் அவர் கூறினார். 

“வயதானவர்கள் பலர் தொண்டூழியம் செய்கிறார்கள், நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகள்வழி நம்பிக்கை பெறுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

தீவு முழுவதும் சன்லவ் இல்லம் மொத்தமாக ஏழு துடிப்புடன் மூப்படைதல் நிலையங்களை நடத்தி வருகிறது.

மதியிறுக்கம் கொண்டோரையும் பராமரிக்கும் சன்லவ் இல்லம், சிங்கப்பூரில் பல்வேறு சேவைகளை ஆற்றும் அறநிறுவனமாக உள்ளது.

குடியிருப்பு இடங்களில் தாதிமைச் சேவைகளை, உதவி தேவைப்படும் தனிநபர்களுக்கு இந்த இல்லம் உதவி வழங்குகிறது. 

குறிப்பாக, முதுமை மறதி உள்ளவர்களுக்குச் சேவை வழங்கப்படுகிறது. அத்துடன், அடிப்படை தாதிமை, முதுமைப் பராமரிப்பு ஆகியவற்றுக்கான நிபுணத்துவப் பயிற்சிகளும் நடத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்