மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் மார்ச் 23ஆம் தேதி அரிதான போர்னியன் இனத்தைச் சேர்ந்த ஓராங் ஊத்தான் பிறந்துள்ளது.
தாய் மிரியும் குட்டியும் நலமுடன் இருப்பதாக மண்டாய் வனவிலங்குக் காப்பகம் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) சமூக ஊடகத்தில் தகவல் வெளியிட்டது.
33 வயதான மிரி, கருவுற்றது முதல் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டதாகக் காப்பகம் தெரிவித்தது.
குட்டி பிறந்த பிறகு தாயும் சேயும் நன்கு ஓய்வு எடுக்கவும் இணக்கமாகப் பழகவும் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டதாக விலங்கு நல ஊழியர் வெண்டி சுவா கூறினார்.
ஏப்ரல் 7ஆம் தேதி முதல் அவை பொதுமக்கள் பார்க்க அனுமதிக்கப்பட்டன..
தற்போது தாயும் குட்டியும் கொஞ்சி விளையாடுவதாகவும் தாயின் அரவணைப்பில் குட்டி காப்பகத்தின் சூழலுக்குப் பழகிக்கொண்டு வருவதாகவும் திருவாட்டி வெண்டி குறிப்பிட்டார்.
உலகின் அழிந்துவரும் விலங்கு இனங்களில் போர்னியன் இனத்தைச் சேர்ந்த ஓராங் ஊத்தானும் உள்ளது. தற்போது உலக அளவில் கிட்டத்தட்ட 104,700 போர்னியன் இனத்தைச் சேர்ந்த ஓராங் ஊத்தான் மட்டுமே உள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.
போர்னியன் இனத்தைச் சேர்ந்த ஓராங் ஊத்தான்கள் ஏறத்தாழ 60 வயது வரை உயிர்வாழக் கூடியவை. அவை எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே குட்டியைப் பெறும்.

