சாகசங்கள் நிரம்பிய வனவிலங்குப் பூங்காவின் இரண்டாம் கட்டம் திறப்பு

சாகசங்கள் நிரம்பிய வனவிலங்குப் பூங்காவின் இரண்டாம் கட்டம் திறப்பு

3 mins read
401120a1-c2f0-46c0-a0c6-9253b9deec8d
‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் அட்வென்ச்சர் ஈஸ்ட்’ வனவிலங்குப் பூங்காவின் வான்வழிப் பார்வையை வழங்கும் ‘கனோபி கிளைடர்’ (Canopy Glider). - படம்: மண்டாய் வனவிலங்குக் குழுமம்
multi-img1 of 4

மண்டாய் வனவிலங்குக் காப்பகத்திற்குச் செல்வோர் இனி விலங்குகளைப் புதிய கோணத்தில் கண்டு மகிழலாம். மரங்களின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவடத்தில் பயணம் செய்துகொண்டே ‘ஒகாப்பி’ போன்ற அருகிவரும் விலங்கினத்தைப் பார்க்கலாம்.

‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் அட்வென்ச்சர்’ எனும் சாகச அடிப்படையிலான விலங்கியல் பூங்காவின் இரண்டாம் கட்டம் வெள்ளிக்கிழமை (மே 29) அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.

‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் அட்வென்ச்சர் ஈஸ்ட்’ எனப்படும் ஏழு ஹெக்டர் பரப்பளவு கொண்ட பகுதி, ஆப்பிரிக்க வெப்பமண்டலக் காடுகள், மடகாஸ்கர் நிலவனப்பை நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தின் பத்தாண்டு உருமாற்றப் பயணத்தில், திறக்கப்பட்டுள்ள புதிய கட்டம் முக்கிய மைல்கல்லாக அமைந்திருக்கிறது. காப்பகத்தின் ஒட்டுமொத்தப் பரப்பளவு 126 ஹெக்டர்.

‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் அட்வென்ச்சர் ஈஸ்ட்’ வனவிலங்குப் பூங்காவில் அமைந்திருக்கும் ‘ரிவரீன் ஃபாரஸ்ட்’ பகுதி.
‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் அட்வென்ச்சர் ஈஸ்ட்’ வனவிலங்குப் பூங்காவில் அமைந்திருக்கும் ‘ரிவரீன் ஃபாரஸ்ட்’ பகுதி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெமாசெக் ஹோல்டிங்ஸ், சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகத்தின் பிரதிநிதிகள், தொழில்துறை, கல்வித் துறைப் பங்காளிகள், மாணவர்கள் உட்பட கிட்டத்தட்ட 300 பேர் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூர்ப் பயணத்துறையின் புதிய அத்தியாயம்

காப்பகம் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் ஆண்டுதோறும் ஏறக்குறைய 4.5 மில்லியன் உள்ளூர், வெளிநாட்டு வருகையாளர்களை அது ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஐந்து வனவிலங்குப் பூங்காக்கள், இரண்டு இயற்கை சார்ந்த சுற்றுலாத் தலங்கள், பொதுப் பசுமை இடங்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த ஓய்வு விடுதி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொலைநோக்குத் திட்டமாகத் தொடங்கிய முயற்சி, இன்று உலகின் தனித்துவமான வனவிலங்கு, இயற்கைப் பகுதியாய் உருமாறியிருப்பதாக அவர் கூறினார். இது சிங்கப்பூர்ப் பயணத்துறை நிலவனப்பின் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் அட்வென்ச்சர் ஈஸ்ட்’ வனவிலங்குப் பூங்காவில் லெமூரைப் பார்வையிடும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ.
‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் அட்வென்ச்சர் ஈஸ்ட்’ வனவிலங்குப் பூங்காவில் லெமூரைப் பார்வையிடும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

“இவை அனைத்தும் இணைந்து, இயற்கையோடு இயைந்த நகரம் என்ற சிங்கப்பூரின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் இடமாக உருவெடுத்துள்ளது,” என்று அமைச்சர் கூறினார்.

முழுமையான மண்டாய் வனவிலங்குக் காப்பகம், சிங்கப்பூரின் ‘பயணத்துறை 2040’ இலக்கான 47 பில்லியன் முதல் 50 பில்லியன் டாலர் வரையிலான வருவாயை ஈட்டுவதற்குப் பங்களிக்கும் என்று சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகத்தின் உதவித் தலைமை நிர்வாகி ஜீன் எங் கூறினார்.

அதன் தனித்துவமான வட்டார ஈர்ப்பைச் சுட்டிக்காட்டிய அவர், “இயற்கைப் பூங்கா அனுபவத்துடன் சாகச அம்சங்களை ‘ரெயின்ஃபாரஸ்ட் வைல்ட் அட்வென்ச்சர்’ இணைக்கிறது. நமது வட்டாரத்தில் இதற்கு இணையானது இல்லை,” என்றார்.

சாகசமும் இயற்கையும் கூடும் தளம்

ஆசியாவின் முதல் சாகச அடிப்படையிலான விலங்கியல் பூங்காவாக அறிமுகப்படுத்தப்படும் இந்த 20 ஹெக்டர் நிலவனப்பு, சாகசங்களை விரும்புவோருக்கு எட்டு மீட்டர் உயரத்தில் ‘ரவீன் ஸ்விங்’ ஊஞ்சலில் பறக்கும் அனுபவத்தையும் அந்தரத்தில் தொங்கும் கயிற்று வலைகளில் நகரும் வாய்ப்பையும் வழங்குகிறது.

‘ரெட் ரவீன்’ (Red Ravine) பகுதியில் உள்ள ‘ரவீன் ஸ்விங்’ ஊஞ்சல்.
‘ரெட் ரவீன்’ (Red Ravine) பகுதியில் உள்ள ‘ரவீன் ஸ்விங்’ ஊஞ்சல். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்த அனுபவங்கள் விலங்குகளின் வாழ்விடங்களிலிருந்து தனியாக வைக்கப்படாமல் அவற்றோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. சாகசங்களில் ஈடுபடுவதும் விலங்குகளைக் கண்டுகளிப்பதும் ஒரே அனுபவமாக இணைகின்றன என்று மண்டாயின் பூங்கா செயல்பாடுகளுக்கான துணைத் தலைவர் மேகி ஆங் விளக்கினார்.

இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்குக் குறிப்பிட்ட கோணத்திலிருந்து விலங்குகளைப் பார்வையிடும் அரிய வாய்ப்புகள் கிடைக்கின்றன. மரங்களின் உச்சிப் பாதையான ‘ட்ரீடாப் ட்ரேவர்ஸ்’ வழியாகச் செல்வோர் ‘ஒகாப்பி’யை அருகில் காணலாம். 11 மீட்டர் உயரமுள்ள ‘பிரைமேட் கிளைம்ப்’ எனும் செயற்கை மரத்தில் ஏறுவோர் டயானா குரங்குகளை நேருக்கு நேர் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவர்.

‘ஹிடன் ஃபாரஸ்ட்’ பகுதியில் உணவு உட்கொள்ளும் ஒகாப்பி.
‘ஹிடன் ஃபாரஸ்ட்’ பகுதியில் உணவு உட்கொள்ளும் ஒகாப்பி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாதுகாப்புப் பணிகளுக்கான உறுதிப்பாடு

காப்பகத்தின் இந்தப் புதிய வளர்ச்சி, பாதுகாப்புப் பணிகளுக்கான அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது. உலகத் தரத்திலான கால்நடை மருத்துவப் பராமரிப்புக்கும் இது ஆதரவளிக்கிறது.

‘லெமூர் லேண்ட்’ பகுதியில் காணப்பட்ட லெமூர்கள்.
‘லெமூர் லேண்ட்’ பகுதியில் காணப்பட்ட லெமூர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிதாகத் திறக்கப்பட்ட மண்டாய் வனவிலங்கு நிலையம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. சுண்டா எறும்புத்தின்னிகள், மலைப்பாம்புகள் உட்பட பாதிக்கப்பட்ட விலங்குகளுக்குச் சிகிச்சை அளித்து மறுவாழ்வு வழங்கும் இந்த மருத்துவமனை, ஜூலை மாதத்திலிருந்து முழுமையாகச் செயல்படத் தொடங்கும்.

காப்பகத்தின் 50 ஆண்டு வரலாற்றை நினைவுகூர்ந்த மண்டாய் வனவிலங்குக் குழுமத்தின் தலைமை நிர்வாகி பென்னட் நியோ, சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விலங்கியல் பூங்காவை உருவாக்குவதைத் தாண்டி சிங்கப்பூர் பெருமைப்படக்கூடிய ஒரு தளத்தை உருவாக்குவதே முக்கிய இலக்காய் இருந்ததாகக் கூறினார்.

நுழைவுச்சீட்டு, தங்கும் வசதிகள்

பூங்காவுக்கான சாதாரண நுழைவுக்கட்டணம் சிங்கப்பூர்வாசிகளில் பெரியவர்களுக்கு $50, சிறுவர்களுக்கு $35, மூத்த குடிமக்களுக்கு $25. திறப்பு விழாவைக் குறிக்கும் வகையில், 2026 ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை உள்ளூர்வாசிகளுக்கு இரண்டு சுற்றுலாத்தலங்களுக்கும் செல்வதற்கான கட்டணத்தில் 30 விழுக்காடு வரை தள்ளுபடி தரப்படும்.

கூடுதல் நேரம் தங்கிச் சுற்றிப்பார்க்க விரும்புவோர் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ‘குரோக்கடைல் லாட்ஜ்’ விடுதியில் இயற்கையோடு கலந்த ‘கிளேம்ப்பிங் இன் த வைல்ட்’ அனுபவத்திற்கு முன்பதிவு செய்யலாம்.

குறிப்புச் சொற்கள்