மனிதவள அமைச்சு, வெளிநாட்டு ஊழியர்களுக்காகத் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட தங்குவிடுதியை அதிகாரபூர்வமாகத் திறந்துள்ளது.
2,400 பேர் தங்கும் வகையில், 210 அறைகளுடன் கட்டப்பட்டுள்ள அது, அமைச்சின் நோக்கத்திற்கு ஏற்ப வடிவமைத்துக் கட்டப்பட்ட முதல் தங்குவிடுதியாகும்.
துக்காங்கில் (Tukang) அமைந்துள்ள இந்தத் தங்குவிடுதியை ஜனவரி 17ஆம் தேதியன்று மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் திறந்து வைத்தார். மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ், மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹுவாங் ஆகியோரும் இந்த அதிகாரபூர்வ திறப்பு விழாவிற்கு வருகை தந்தனர்.
விழாவில் பேசிய அமைச்சர் டான், “தொடக்கத்தில் அடிப்படைத் தங்குமிட வசதியை மையமாகக் கொண்டு இயங்கினாலும், கொவிட்-19 பெருந்தொற்றுக் காலம் தங்குவிடுதிக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது,” என்றார்.
அப்போதிலிருந்து அரசாங்கம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகக் கூறிய டாக்டர் டான், ஊழியர்களின் உடல் மற்றும் மன நலனைக் கருத்தில் கொண்டு இந்தப் புதிய விடுதி வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் தொற்றுப் பரவலைத் தடுத்து, சமூக ஒன்றுகூடலை ஊக்குவிக்கும் வகையில் இந்த வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். லிஷா உள்ளிட்ட பங்குதாரர்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளையும் உள்ளடக்கி, இதனை ‘வீட்டுக்கு அப்பால் மற்றொரு வீடு’ எனும் நோக்கில் வடிவமைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
“வாடகையை அதிகம் உயர்த்தாமல், அதேநேரம் சிறந்த வசதிகளை ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். அனைவருக்கும் தரமான தங்குமிட வசதி சாத்தியம் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது,” என்றார் டாக்டர் டான்.
இதனைத் தொடர்ந்து, இந்த விடுதியைக் காட்டிலும் மூன்று மடங்கு பெரிய விடுதி ஒன்றை மனிதவள அமைச்சு செங்காங் வெஸ்ட் வட்டாரத்தில் திறக்கும் என்று கூறிய டாக்டர் டான், அதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தங்குவிடுதி நிலைமாற்றத் திட்ட மானியம் அறிவிப்பு
தங்குவிடுதி நிலைமாற்றத் திட்டத்தின் (Dormitory Transition Scheme) கீழ், தேர்ந்தெடுக்கப்படும் தங்குவிடுதிகளுக்கு, மறுசீரமைப்புப் பணிகளுக்காக மானியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
தேர்ந்தெடுக்கப்படும் விடுதிகள், ஒரு பிரிவுக்கு 3,000 முதல் 8,800 வெள்ளி வரை மானியம் பெறும். ஏறத்தாழ 200,000 படுக்கைகளைக் கொண்ட 900 விடுதிகள் இம்மானியங்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இத்திட்டம், தங்குவிடுதிகள் அனைத்தும் 2030ஆம் ஆண்டுக்குள், மேம்படுத்தப்பட்ட இடைக்காலத் தரநிலைகளை எட்ட வேண்டும் என்றும், 2040க்குள் புதிய தங்குவிடுதித் தரநிலைகளை முழுமையாக எட்ட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
“தரமான தங்குமிடங்களை இலக்காகக் கொண்டுள்ள அதே வேளையில், அம்மாற்றங்களுக்கு ஆதரவளிக்க அமைச்சு கொண்டுள்ள உறுதியை இம்மானியம் சுட்டிக்காட்டுகிறது,” என்றார் மனிதவள அமைச்சின் வெளிநாட்டு ஊழியர் நிர்வாகக் கொள்கைப் பிரிவின் (Foreign Manpower Management Policy) வேலையிடக் கொள்கை, உத்திகள் பிரிவு (Workplace Policy and Strategy Division) இயக்குநர் சியாவ் யிங்.
இந்த நிலைமாற்றத்தை விரைவாக்க ஏதுவாக 2028ஆம் ஆண்டுக்குள் மறுசீரமைப்புப் பணிகளை நிறைவுசெய்யத் திட்டமிடும் நிறுவனங்களுக்குக் கூடுதல் மானியமும் வழங்கப்படும்.
மேம்படுத்தப்பட்ட தரமான தங்குமிட வசதிகள்
மனிதவள அமைச்சின் புதிய தங்குவிடுதித் தரநிலைகளை (New Dormitory Standards) ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விடுதியில், ஓர் அறையில் தங்கும் ஊழியர்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ‘நெஸ்ட்’ (NESST) நிறுவனம் நடத்தவுள்ள இவ்விடுதியில் ஓர் அறைக்கு 12 ஊழியர்கள் தங்கலாம்.
புதிய விடுதியில் ஒவ்வோர் அறையிலும் தனித்தனியே குளியல், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
தொழில்நுட்பங்களின் துணையுடன் கூடிய நிர்வாகம், ஊழியர்களுக்கான பிற வசதிகளுடன் இயங்கும் இவ்விடுதியில் ஏறத்தாழ மொத்தப் படுக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 50 விழுக்காட்டுப் படுக்கைகளில் உரிய ஊழியர்கள் குடியேறி விட்டதாகவும் ‘நெஸ்ட்’ நிறுவனம் தெரிவித்தது.
தங்கள் ஊழியர்களுக்காக 15 அறைகளைப் பதிவு செய்துள்ளது ‘ஏஷியா ப்ரொஜெக்ட்ஸ் எஞ்சினியரிங்’ நிறுவனம். அவற்றில் ஏழு அறைகளில் ஊழியர்கள் தங்கும் நிலையில், இங்குள்ள வசதிகள் தங்கள் ஊழியர்களுக்குச் சிறந்ததாக அமைந்துள்ளதாகக் கூறினார் நிறுவனத்தின் இயக்குநர் கசுஹிரோ நிஷியோகா (Kazuhiro Nishioka).
“அமைச்சர் உரையில் குறிப்பிட்டதுபோல், சிங்கப்பூரின் கட்டமைப்பில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு இன்றியமையாதது. எங்கள் நிறுவன ஊழியர்களில் ஏறத்தாழ 50 விழுக்காட்டினர் வெளிநாட்டு ஊழியர்கள். அவர்களுக்கு நல்ல தரமான வாழ்க்கைச் சூழலைத் தருவது எங்கள் கடமை. அது அவர்களின் உடல், மன நலனைப் பேணுவதுடன், அவர்களது உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும்,” என்றார் அவர்.
“வெளிச்சமும் காற்றோட்டமும் நிறைந்த தங்குவிடுதி, நல்ல உறக்கத்தைத் தந்து அடுத்த நாள் பணிக்குச் செல்ல உற்சாகத்தை அளிக்கிறது. இங்குள்ள வசதிகள் ஒன்றுகூடலை ஊக்குவிக்கிறது. சிறு சிறு நுணுக்கங்களைக் கவனத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. வெளிநாட்டு ஊழியர்கள் அனைவருக்கும் தங்குவிடுதிகள் விரைவில் இந்தத் தரத்திற்கு ஏற்ப உயர்த்தப்பட வேண்டும் என விரும்புகிறேன்,” என்றார் கடந்த ஒருமாதகாலமாக இங்கு வசிக்கும் ஊழியர் கணேசன் வெங்கடேஷ், 32.

