இணையவழி பாலியல் தீங்குகளை எதிர்கொள்ள சமூகத்தின் ஆதரவு அவசியம்: ரஹாயு மஹ்ஸாம்

இணையவழி பாலியல் தீங்குகளை எதிர்கொள்ள சமூகத்தின் ஆதரவு அவசியம்: ரஹாயு மஹ்ஸாம்

2 mins read
02a67a23-0473-4b8c-b312-baca865f518d
பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மின்னிலக்க பழக்கவழக்கங்களைக் கண்காணிப்பதோடு, எல்லைகளை வகுத்தல் மற்றும் முறையற்ற உள்ளடக்கங்கள் குறித்து புகார் அளித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தகவல், மின்னியல் மேம்பாட்டுத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் (இடமிருந்து இரண்டாவது) தெரிவித்தார். - படம்: சாவ்பாவ்

செயற்கை நுண்ணறிவு, குறிப்பாக உருவாக்கச் செயற்கை நுண்ணறிவு, இணையவழி பாலியல் தீங்குகளை விளைவிப்பதற்கான தடைகளை வெகுவாகக் குறைத்துள்ளதாக தகவல், மின்னிலக்க மேம்பாட்டுத் துணையமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் இணையவழி பாலியல் தீங்குகள் தொடர்பாக நடத்தப்பட்ட சிங்கப்பூர் கருத்தரங்கில் இதுகுறித்து அவர் பேசினார்.

இந்தக் கருத்தரங்கு திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 23) தேசிய நூலகக் கட்டடத்தில் நடைபெற்றது.

இணையவழி பாலியல் தீங்குகளை ஏற்படுத்த முன்பெல்லாம் தொழில்நுட்ப அறிவு தேவைப்பட்டதாகவும் ஆனால் இன்று ஏதேனும் ஒரு புகைப்படம் மற்றும் இணையக் கட்டளை மூலமாகவே எவரும் தவறான உள்ளடக்கங்களை உருவாக்க முடியும் என்பதை திருவாட்டி ரஹாயு சுட்டினார். மைக்ரோசாஃப்ட் டிசைனர் மற்றும் எக்ஸ் தளத்தின் ‘க்ரோக்’ போன்ற கருவிகள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்ட சம்பவங்கள் இதற்குச் சான்றாகும் என்றார் அவர்.

இச்சவால்களை எதிர்கொள்ளச் சிங்கப்பூர் அரசாங்கம் பல சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 2022ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ‘இணையப் பாதுகாப்புச் சட்டம்’ மற்றும் 2025ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ‘இணையப் பாதுகாப்பு (நிவாரணம் மற்றும் பொறுப்பேற்பு) சட்டம்’ ஆகியவை இதில் முக்கியமானவை என்று திருவாட்டி ரஹாயு தெரிவித்தார்.

மேலும், 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் இணையப் பாதுகாப்பு ஆணையம் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், சட்டம் மட்டுமே இதற்கு முழுமையான தீர்வாகாது என்று திருவாட்டி ரஹாயு கூறினார்.

“தொழில்நுட்பம் வளர வளர, குற்றவாளிகளும் புதிய வழிகளைக் கண்டறிகின்றனர். எனவே, சமூகத்தின் கூட்டு முயற்சி அவசியம். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் மின்னிலக்க பழக்கவழக்கங்களைக் கண்காணிப்பதோடு, எல்லைகளை வகுத்தல் மற்றும் முறையற்ற உள்ளடக்கங்கள் குறித்து புகார் அளித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் தொழில் துறை மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து செயல்படுவதன் மூலமே பாதுகாப்பான இணையச் சூழலை உருவாக்க முடியும்,” என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்