தி ஆன்லைன் சிட்டிசன் தலைமை ஆசிரியர் இரு அமைச்சர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

தி ஆன்லைன் சிட்டிசன் தலைமை ஆசிரியர் இரு அமைச்சர்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

2 mins read
62cad438-e80e-4b2d-8239-0334d7755cec
உள்துறை அமைச்சர் கா. சண்முகம், மனிதவள அமைச்சர் டான் சீ லெங் இருவருக்கும் தி ஆன்லைன் சிட்டிசன் தலைமை ஆசிரியர் டெர்ரி சு $210,000 இழப்பீடு வழங்கவேண்டும். - படம்: சாவ்பாவ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் உயர் நீதிமன்றம், தி ஆன்லைன் சிட்டிசன் தலைமை ஆசிரியர் டெர்ரி சுவிற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில் உள்துறை அமைச்சர் கா. சண்முகம், மனிதவள அமைச்சர் டான் சீ லெங் ஆகியோருக்குச் சாதகமாக தீர்ப்பளித்துள்ளது.

அவர்கள் கோரிய $210,000 இழப்பீட்டுத் தொகையை திரு டெர்ரி சூ செலுத்தும்படி தீர்ப்பளிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தி அன்லைன் சிட்டிசன் தளம், அந்த ஆண்டு சிங்கப்பூரில் விற்பனையான பாதி பங்களா வீடுகளின் பரிவர்த்தனைப் பதிவுகள் குறித்து பொதுமக்களுக்குத் தெரியவில்லை என்றும் அதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் புளூம்பர்க் செய்தி நிறுவனத்தை மேற்கொள்காட்டி பதிவிட்டது.

திரு சண்முகம், திரு டான் சீ லெங் ஆகியோருடன் சம்பந்தப்பட்ட பங்களாக்களைப் புளூம்பர்க்கின் கட்டுரை குறிப்பிட்டது.

அதையடுத்து தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிபதி ஆட்ரி லிம் 28 பக்கத் தீர்ப்பை வெளியிட்டார்.

தி ஆன்லைன் சிட்டிசன் தலைமை ஆசிரியர் திரு சு, நீதிமன்றத்துக்கு வர தவறியதை அடுத்து நீதிபதி திரு சண்முகம், திரு டான் ஆகியோருக்குச் சாதகமாகக் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

தி அன்லைன் சிட்டிசன் வெளியிட்ட கட்டுரையில் அமைச்சர்கள் இருவரும் தவறு செய்ததைப் போலவும் அதை மூடிமறைக்க முற்பட்டதைப் போலவும் காட்டப்பட்டுள்ளது என்ற நீதிபதி, அவர்களின் நடத்தையை அது அவமதிப்பதாக இருந்தது என்றார்.

அமைச்சர்கள் மீதான அத்தகைய அவதூறுகள் தனிப்பட்ட விதத்தில் மட்டுமல்ல, பணி ரீதியிலும் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் இழப்பீட்டுத் தொகை அதிகமாக உள்ளது என்று நீதிபதி விளக்கம் அளித்தார்.

தி அன்லைன் சிட்டிசன் இணையத்தளத்தில் அந்தக் கட்டுரை வெளியானது மட்டுமின்றி அதன் அனைத்துச் சமூக ஊடகங்களிலும் அமைச்சர்கள் குறித்த பதிவுகள் வெளியாகின என்றார் நீதிபதி லிம்.

குறிப்புச் சொற்கள்