5% முதல்நிலை குடும்பங்களிடம் சிங்கப்பூர் குடும்பங்களின் மூன்றில் ஒரு பங்கு செல்வம்

5% முதல்நிலை குடும்பங்களிடம் சிங்கப்பூர் குடும்பங்களின் மூன்றில் ஒரு பங்கு செல்வம்

2 mins read
29b0fe47-02f6-4316-a699-e4e98f11b32a
எல்லாக் குடும்பங்களின் செல்வவளத்தில் 14 விழுக்காடு, ஒரு விழுக்காட்டு மேல்மட்ட குடும்பங்களிடம் உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள எல்லாக் குடும்பங்களின் செல்வவளத்தில் 14 விழுக்காடு, வசதிபடைத்த ஒரு விழுக்காட்டு குடும்பங்களிடம் உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல, மொத்தக் குடும்பங்களின் செல்வவளத்தில் 33 விழுக்காடு, முதல்நிலையில் உள்ள ஐந்து விழுக்காட்டு பணக்காரக் குடும்பங்களிடம் உள்ளதாகவும் நிதிக்கான மூத்த துணை அமைச்சர் ஜெஃப்ரி சியோவ் கூறியுள்ளார்.

வரவுசெலவுத் திட்டக் கூட்டம் நெருங்கிய நிலையில், இம்மாதம் 9ஆம் தேதி வெளியிடப்பட்ட சிங்கப்பூரின் செல்வவளமும் ஏற்றத்தாழ்வும் என்னும் ஆய்வறிக்கை குறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் திரு சியோவ் இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் அப்படி ஓர் அரசாங்க ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது இதுவே முதல்முறை.

அந்த அறிக்கை வருமான ஏற்றத்தாழ்வைக் காட்டிலும் செல்வ ஏற்றத்தாழ்வு அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டியதோடு, சமூகப் பொருளியல் நிலையில் தனிநபர்கள், குடும்பங்களின் மாற்றம் குறைந்து வருவதையும் குறிப்பிட்டது.

அரசாங்க வழங்குதொகையையும் வரிகளையும் கணக்கில்கொண்ட பிறகு, வருமான ஏற்றத்தாழ்வைக் கணக்கிடும் சிங்கப்பூரின் ‘ஜினி குறியீடு’ 0.38ஆக இருந்த நிலையில், செல்வ ஏற்றத்தாழ்வைக் கணக்கிடும் ‘ஜினி’ குறியீடு 0.55 என அதிகமாக இருந்தது.

இந்நிலையில், ஆய்வில் குறிப்பிடப்பட்ட தரவுகளைக் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று திரு சியோவ் புதன்கிழமை (பிப்ரவரி 25) நாடாளுமன்றத்தில் கூறினார்.

சிங்கப்பூரின் செல்வச் செறிவு அளவுகள், முன்னேறிய பொருளியல்களுடன் பரவலாக ஒப்பிடக்கூடியவை என்று குறிப்பிட்ட அவர், வாழ்க்கைச் சுழற்சியில் செல்வங்கள் பெருகி வருவதால் முன்னேறிய நாடுகள் எல்லாவற்றிலும் வருமான ஏற்றத்தாழ்வை விட செல்வ ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ளது என்றார்.

வருமான ஏற்றத்தாழ்வு என்பது மக்கள்தொகை இடையிலான வருவாய் விநியோகத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

அதேநேரம், சொத்து இருப்பு, அடைமானம், பங்குகள், சேமிப்புகள் போன்ற ‘சொத்துகள் மற்றும் கடன் பொறுப்பு’களின் அடிப்படையில் செல்வ ஏற்றத்தாழ்வு கணிக்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்