எண்ணெய்க் கசிவு: துப்புரவுப் பணிகள் விரிவாக்கம்

எண்ணெய்க் கசிவு: துப்புரவுப் பணிகள் விரிவாக்கம்

1 mins read
e19a5110-faaa-4b66-843a-9bcc5f27d754
ஜூன் 17 திங்கட்கிழமையன்று ஹார்பர்ஃபிரன்ட் சென்டருக்கும் செந்தோசாவிற்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் தென்பட்ட எண்ணெய்ப் படலம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

இம்மாதம் 14ஆம் தேதி பாசிர் பாஞ்சாங் முனையத்தில் சேதமடைந்த கப்பலிலிருந்து எண்ணெய் கசிந்து, கடல்நீரில் கலந்ததையடுத்து, அதனை அகற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சாங்கி கடற்பகுதிவரை எண்ணெய்ப் படலம் பரவிவிட்டதையடுத்து, துப்புரவுப் பணிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

எண்ணெய்ப் படலம் மேலும் பரவாமல் தடுக்க 1,500 மீட்டர் நீளத்திற்கு மிதவைத் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், செந்தோசா தீவிலுள்ள பல கடற்கரைகள், லேப்ரடார் இயற்கை வனப்பகுதி என மேலும் 1,600 நீளத்திற்கு மிதவைத் தடுப்புகள் போடப்படவுள்ளன.

சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம், தேசிய சுற்றுப்புற வாரியம், தேசியப் பூங்காக் கழகம், பொதுப் பயனீட்டுக் கழகம், செந்தோசா மேம்பாட்டு நிறுவனம், சிங்கப்பூர் உணவு அமைப்பு ஆகியவை இணைந்து திங்கட்கிழமை (ஜூன் 17) ஒரு கூட்டறிக்கை மூலம் இதனைத் தெரிவித்தன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாங்கி ஈஸ்ட்டிலும் மிதவைத் தடுப்புகள் போடப்படும்.

எண்ணெய்க் கசிவால் வெஸ்ட் கோஸ்ட் பூங்காவிற்குப் பாதிப்பில்லை என்றபோதும், அங்குள்ள மார்ஷ் தோட்டத்தில் இருக்கும் சதுப்புநிலத் தாவரங்களைப் பாதுகாக்கும் பொருட்டு எண்ணெய் உறிஞ்சு மிதவைகள் நிறுவப்படவுள்ளன.

அதுபோல, கிழக்கு ஜோகூர் நீரிணையில் உள்ள மீன் பண்ணைகள், செக் ஜாவா சதுப்புநிலம், சாங்கி சிற்றோடை ஆகியவற்றைப் பாதுகாக்கும் நோக்கிலும் கூடுதல் தடுப்புகளும் உறிஞ்சு மிதவைகளும் போடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
எண்ணெய்க் கசிவுசெந்தோசாசாங்கிசிங்கப்பூர்