வயதான பெற்றோரைப் பராமரிக்கும் இளையர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்: சமூக சேவை அமைப்புகள்

வயதான பெற்றோரைப் பராமரிக்கும் இளையர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்: சமூக சேவை அமைப்புகள்

2 mins read
ac94d1fa-0d75-4052-9a17-e6e9b3f0cb1a
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சேமுவல் சியு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தமது 60 வயது தாயாரைப் பராமரிக்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் வயதான பெற்றோரைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்புகளை இளம் வயதிலேயே பிள்ளைகள் ஏற்கும் நிலை அதிகரித்துவருவதாக சமூகச் சேவை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

35 வயதுக்குக்கீழ் எத்தனை இளம் பராமரிப்பாளர்கள் இருக்கின்றனர் என்பதை எடுத்துக்காட்ட அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் இல்லை என்றபோதும் வயதான பெற்றோரைப் பார்த்துக்கொள்ளும் நிலைக்கு இளையர்கள் ஆளாகலாம் என்று கூறப்படுகிறது.

திருமணம் முடிக்கும் தம்பதிகள் சிலகாலம் கழித்து பிள்ளை பெற்றுக்கொள்வதாலும் சிங்கப்பூரின் மூப்படையும் சமூகத்தாலும் பல இளையர்கள் முன்கூட்டியே வயதான பெற்றோரைப் பார்த்துக்கொள்ளவேண்டிய சூழலை எதிர்கொள்ளலாம் என்றார் உடற்குறையுள்ளோருக்குச் சேவை வழங்கும் எஸ்பிடி அமைப்பின் தலைமை நிர்வாகி அபிமன்யு பால்.

குடும்பங்களைத் தொடங்குவதற்கும் வாழ்க்கைத்தொழிலுக்கும் இடையில் சிக்கிக்கொள்ளும் இளையர்கள் வயதான பெற்றோரைப் பார்த்துக்கொள்ளவேண்டியிருப்பதால் மற்றதேவைகளை விட்டுக்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படலாம் என்றார் அவர்.

பிள்ளைகளையோ பெற்றோரையோ பற்றி விசாரிக்க ஒவ்வொரு மாதமும் தனது பராமரிப்பாளர் எண்ணுக்குக் கிட்டத்தட்ட 120 அழைப்புகள் வருவதாக ‘டச்’ பராமரிப்பாளர்கள் ஆதரவுக் குழுக்கள் அமைப்பு தெரிவித்தது.

அவ்வாறு அழைப்பு விடுப்போரில் 10 விழுக்காட்டினர் இளம் பராமரிப்பாளர்கள் என்று ‘டச்’ அமைப்பு குறிப்பிட்டது.

நம்பிக்கை இல்லாததாலும் முன்கூட்டியே தயாராக இல்லாததாலும் பராமரிப்பாளர்கள் உளவியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர் என்றார் ‘டச்’ அமைப்பை வழிநடத்தும் திருவாட்டி ஜூன் சிம்.

அத்தகைய சூழலில் பராமரிப்பாளர்கள் இரவு முழுவதும் அன்புக்குரியவர்களைப் பார்த்துக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்றார் அவர்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சுற்றுப்புற பூமி கட்டமைப்புகள் துறையில் முதலாம் ஆண்டு பயிலும் 26 வயது சேமுவல் சியு, மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தாயாரைப் பராமரிக்கிறார்.

சமைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது, 60 வயது தாயை மருத்துவரிடம் அழைத்துச்செல்வது போன்றவற்றையும் அவர் பார்த்துக்கொள்கிறார்.

அதற்காக ஜனவரியிலிருந்து ஏப்ரல் வரை கல்வியிலிருந்து அவர் விடுப்பு எடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்