2019க்குப் பிறகு சொந்தத் தனியார் கார்களின் எண்ணிக்கை ஆகக் குறைவு

2019க்குப் பிறகு சொந்தத் தனியார் கார்களின் எண்ணிக்கை ஆகக் குறைவு

2 mins read
d8bcb174-371a-40fd-90a7-98eb997157a4
தனியார் கார்களின் எண்ணிக்கை குறைந்துவரும் வேளையில், வாடகை கார்களின் எண்ணிக்கை ஜூனில் ஆக உயர்ந்த நிலையை எட்டியுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூரில் தனியார் கார்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு 516,237 என இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

ஒப்புநோக்க, வாடகை கார்களின் எண்ணிக்கை 97,567 என இதுவரை இல்லாத அளவைத் தொட்டுள்ளது.

கார்களின் விலை உயர்வு காரணமாக, சொந்த காரை வைத்திருப்பதற்குப் பதிலாக, எப்போதாவது மட்டுமே கார் தேவைப்படுவோர் வாடகைக்குக் கார் எடுக்கின்றனர் அல்லது வாடகை காரில் பயணிக்கின்றனர்.

வாடகை கார்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், சொந்தத் தனியார் கார்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளபோதும், அதற்கான பங்கு குறைந்துவருகிறது.

ஜூன் மாத இறுதியில், மொத்தமுள்ள 653,442 கார்களில் 79 விழுக்காடு மட்டுமே தனியார் கார்கள். ஒப்புநோக்க, 2021ஆம் ஆண்டில் மொத்தக் கார்களின் எண்ணிக்கை 645,150ஆக இருந்தபோது, அது 82.5 விழுக்காடாக இருந்தது.

இதற்கிடையே, வாடகை கார்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 2021ல் 67,990 வாகனங்களுடன் மொத்தக் கார்களின் எண்ணிக்கையில் 10.5 விழுக்காடாக இருந்த வாடகை கார்கள், இப்போது சாலையில் இயங்கும் கார்களில் 14.9 விழுக்காடாக உயர்ந்துள்ளன.

வாடகை கார்களின் எண்ணிக்கையில், ஓட்டுநர் அழைத்துச்செல்லும் சேவைக்குப் பயன்படுத்தப்படும் கார்களின் எண்ணிக்கை சற்றுக் குறைந்துள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் ஜூலை 24ஆம் தேதி வெளியிட்ட அண்மைய காலாண்டு அடிப்படையிலான தரவுகள் காட்டின.

2025ஆம் ஆண்டின் இறுதிக்கும் 2026 ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில், அந்த எண்ணிக்கை 62,092இல் இருந்து 61,250ஆகக் குறைந்தது.

அதே காலகட்டத்தில், சுயமாக ஓட்டிச்செல்வோருக்கான வாடகை கார்களின் எண்ணிக்கை 33,765ல் இருந்து 36,317ஆக அதிகரித்துள்ளது. அத்தகைய வாடகை கார்கள், கட்டணம் செலுத்தும் பயணிகளுக்குப் பயன்படுத்தப்படமுடியாது.

அந்தக் கார்கள் குறுகியக் கால கார் பகிர்வு சேவைகளுக்கோ நீண்டகாலக் குத்தகைகளுக்கோ பயன்படுத்தப்படுகின்றன.

ஆணையத்தின் புள்ளிவிவரங்கள், வாகனவோட்டிகள் சொந்தமாக கார் வைத்திருப்பதிலிருந்து விலகுகின்றனரா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.

சொந்தமாக கார் வைத்திருப்பதை விட்டுவிட்டு, வாகனவோட்டிகள் மாற்றுப் போக்குவரத்துத் தெரிவுகளை நாடுவதை அந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றனவா என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த ஆணையத்தின் பேச்சாளர், பயணிகளின் விருப்பங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆய்வு செய்ய அதிகமான குறியீடுகள் குறிப்பிட்ட காலத்திற்குத் தொடர்ந்து கண்காணிக்கப்படவேண்டும் என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்
தனியார்கார்சரிவு